வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 28 டிசம்பர் 2019 (14:29 IST)

எடுபிடி அரசின் கெடுபிடி ஆணைகள் - ஸ்டாலின் அறிக்கை!

மாட்டு பொங்கலன்று பிரதமரின் உரையை கேட்க மாணவர்களை பள்ளிக்கு வர சொல்லி ஆணை பிறப்பித்திருப்பதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 15ம் தேதி முதல் பொங்கல் பண்டிகை தமிழகமெங்கும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் மாட்டு பொங்கல் நடைபெறும் 16ம் தேதியன்று மாணவர்களுக்காக பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார். இந்த உரையானது தூர்தர்ஷன், வானொலி மற்றும் இணையதளம் மூலமாகவும் ஒளிபரப்பாகிறது.

இந்த நிகழ்ச்சியை 9 முதல் 12 வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் பள்ளிகளில் வந்து காண வேண்டும் என பள்ளிக்கல்வி துறை அனுப்பிய சுற்றறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழாக்காலத்தில் மாணவர்களை பள்ளிக்கு வர சொல்வதா என கேள்விகள் எழுந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ”அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வர வேண்டிய கட்டாயமில்லை. வீட்டில் தொலைக்காட்சி பெட்டி இல்லாத மாணவர்கள் பள்ளிகளில் வந்து நிகழ்ச்சியை காணலாம் என்றே சொல்லப்பட்டுள்ளது” என்று விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் அரசு அனுப்பிய சுற்றறிக்கையை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள மு.க.ஸ்டாலின் ”கட்டாயமில்லை என்று முதல்வர் சொன்னாலும் சுற்றறிக்கையில் அப்படி குறிப்பிடாதது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தமிழர் விழாவான பொங்கல் விழாவை சீர்குலைக்கும் நோக்கில் பாஜக செயல்படுவதாகவும், அதற்கு எடுபிடி அரசு கெடுபிடி ஆணைகளை பிறப்பிப்பதாகவும் ஆளும்கட்சியை விமர்சித்துள்ளார்.

மேலும் அரசு பிறப்பித்த ஆணையை திரும்ப பெறாவிட்டால் பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் அமைச்சர் அலுவலகங்கள் முன்பு திமுக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் என்று தெரிவித்துள்ளார்.