மீத்தேன், சிஏஏ போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வரும் நிலையில் சி.ஏ.ஏ உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளுக்கு நடுவே தமிழக சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் இன்றைய கூட்டத்தொடரில் கொரோனா பாதிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்றை சட்டசபை கூட்டத்தில் அறிவிப்புகள் சிலவற்றை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் எட்டுவழி சாலை, மீத்தேன், சிஏஏ உள்ளிட்டவற்றிற்கு எதிராக போராடியவர்கள் மீது தமிழக அரசு தொடுத்த வழக்குகளை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். முன்னதாக ஆட்சிக்கு வந்து சில நாட்களில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டது குறிப்ப்பிடத்தக்கது.