வெங்காய விலை உயர்வுக்கு பீகார் தேர்தல்தான் காரணம்! – செல்லூரார் விளக்கம்
தமிழகத்தில் வெங்காய வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ள நிலையில் இதற்கு காரணம் பீகார் தேர்தலே என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
வடமாநிலங்களில் மழைபொழிவு, வெங்காய சாகுபடி குறைவு உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்திற்கு வெங்காய வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டிலும் வெங்காய விலை ரூ.100ஐ தாண்டி விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் சில பகுதிகளில் பல வியாபாரிகள் வெங்காயத்தை பதுக்கி வைத்து பிடிபட்ட சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெங்காய தேவையை பூர்த்தி செய்ய எகிப்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வெங்காய விலை உயர்வு குறித்து பேசியுள்ள அமைச்சர் செல்லூர் ராஜூ, பீகாரில் சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடங்கியதால் வெங்காய சாகுபடி மற்றும் ஏற்றுமதி அங்கு குறைந்துள்ளதாகவும், அதனால் தமிழகத்திற்கு வெங்காயம் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளதாகவும், தற்போது தேர்தல் முடிந்துள்ள நிலையில் விரைவில் வெங்காயம் வரத்து அதிகரித்து, விலை குறையும் என்று தெரிவித்துள்ளார்.