1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 13 ஜூன் 2024 (13:32 IST)

நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் யாரும் கருணை மதிப்பெண் பெறவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். 
 
மேலும் ராஜஸ்தான், குஜராத், ஹரியானா போன்ற மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கு தான் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது என்றும், எனவே இதுகுறித்து தமிழ்நாடு அரசு சார்பில் நீதிமன்றத்தை நாடப்போவதில்லை என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ஆனால் அதே நேரத்தில் மத்திய அரசிடம் தொடர்ந்து நீட் தேர்வு வேண்டாம் என்று வலியுறுத்துவோம் என்றும் அவர் பேட்டியில் தெரிவித்தார்.
 
முன்னதாக நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கருணை மதிப்பெண் பெற்ற 1563 மாணவர்களுக்கு வரும் 23ஆம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது.
 
1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் அளித்தது குறித்து விசாரிக்க 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டதாகவும், அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அந்த மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும் என்றும் உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
 
 
 
Edited by Mahendran