ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 22 அக்டோபர் 2019 (13:33 IST)

பிகிலுக்கு பிகில் ஊதிய அமைச்சர் கடம்பூர் ராஜு! – சிறப்பு காட்சிகள் ரத்து!?

தீபாவளியன்று பிகில் உள்ளிட்ட அனைத்து திரைப்படங்களுக்கும் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதியில்லை என  அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு விஜய் நடித்துள்ள ‘பிகில்’ மற்றும் கார்த்தி நடித்துள்ள ‘கைதி’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. தீபாவளியின்போது மக்கள் பலர் திரையரங்குகளுக்கு படையெடுப்பது அதிகமாகியுள்ளதால் திரையரங்குகள் இந்த படங்களுக்கு சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்து லாபம் பார்க்கலாம் என திட்டமிட்டிருந்தன.

ஆனால் சிறப்பு காட்சிகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், சிறப்பு காட்சிகளின்போது பல்வேறு சண்டை, சச்சரவுகள் ஏற்படுவதாகவும் அடிக்கடி புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நடவடிக்கை எடுத்த அமைச்சர் கடம்பூர் ராஜு “தீபாவளியன்று பிகில், கைதி உள்ளிட்ட எந்த திரைப்படங்களுக்கும் சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்ய தமிழக அரசு அனுமதி தரவில்லை. மற்ற நாட்களை போல் பரிந்துரைக்கப்பட்ட அளவு காட்சிகள் மட்டுமே திரையரங்குகள் நடத்த வேண்டும். மீறி சிறப்பு காட்சிகள் நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சிறப்பு காட்சிகளுக்கு டிக்கெட்டுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்று உறுதியளித்தால் மட்டுமே சிறப்பு காட்சிகள் திரையிடல் குறித்து பரிந்துரை செய்ய முடியும்” என தெரிவித்துள்ளார்.

இது விஜய் ரசிகர்களுக்கும், பொது மக்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் திரையரங்க உரிமையாளர்கள் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கேட்டு தமிழக அரசிடம் முறையிடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.