1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2015 (02:08 IST)

தாதுமணல் விவகாரத்தில் தமிழகஅரசு மேல்முறையீடு செய்ய மு.க.ஸ்டாலின் கோரிக்கை

தாதுமணல் விவகாரத்தில் தமிழகஅரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
இது குறித்து, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
 
தாது மணல் அள்ளுவதற்குத் தமிழக அரசு விதித்த தடை சட்டவிரோதமானது" என்று சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது.
 
இந்தத் தீர்ப்பிற்கு எதிராக மாநில அரசு உடனடியாக மேல்முறையீடு செய்து, தாது மணல் கொள்ளைக்கு எதிராகக் குரல் கொடுத்த அரசியல் கட்சியினர், பத்திரிக்கையாளர்கள், நடுநிலையாளர்கள், பொதுமக்கள் என அனைவரது மனதிலும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த மாநில அரசு முன்வர வேண்டும்.
 
மாநிலத்தில் தாது மணல் பெருமளவில் சட்ட விரோதமாக அள்ளப்படுவதையும், இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதைப் பற்றியும் வந்த புகார்களை விசாரித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப் சிங் பேடி ஏற்கனவே அளித்த அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை.
 
மேற்கூறிய தாது மணலில் அணு உற்பத்திக்குப் பயன்படும் அணுக் கனிமங்கள் இருக்கின்றன என்பது இந்த நேரத்தில் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியதாகும். நாட்டின் நலன் கருதி தாது மணல் அள்ளும் இது போன்ற நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தி, அது தொடர்பான சட்ட விதிமுறைகளை முறைப்படி அமல்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.
 
மேலும், தாது மணல் அள்ளும் நடவடிக்கையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மட்டுமின்றிக் குறிப்பாகக் கடலோரப் பகுதிகளில் வாழும் மக்களின் சுற்றுப்புற சூழலும், அவர்களின் வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
 
அதை விட, சட்டவிரோத தாது மணல் அள்ளும் நடவடிக்கையால் ஏற்படும் வன்முறைகளில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதிகளைச் சார்ந்த கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். உள்ளூர் மக்களின் உடல் நலனும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு இந்தப் புகார்களை எல்லாம் கண்டும் காணாமல் இருக்கக் கூடாது.
 
எனவே, ககன்தீப் சிங் கமிட்டியின் அறிக்கையை மாநில அரசு உடனே வெளியிட வேண்டும் என்றும், பொதுமக்களைப் பாதுகாக்கவும், அவர்களுக்கு ஏற்ற சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படாமல் இருக்கவும் தாது மணல் அள்ளுவது குறித்த சட்ட விதிமுறைகளை உடனே அமல்படுத்த மாநில அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.