5 ஆண்டுகளுக்குப் பின்னர் முழு கொள்ளளவை எட்டப்போகும் மேட்டூர் அணை
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக 5 ஆண்டுகளுக்குப் பின்னர் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டப்போகிறது.
கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அதிகபட்சமாக தமிழகத்திற்கு வினாடிக்கு 1.15 லட்சம் கன அடி உபரி தண்ணீர் திறக்கப்பட்டது. அதேபோல் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்திற்கு விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி தண்ணீர் மற்றும் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது.
தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் 117 அடியை எட்டியுள்ளது. இன்று இரவு அணைநீர் மட்டம் தனது முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 2013ல் அணை முழுமையாக நிரம்பியது. அணை கட்டி 83 ஆண்டுகளில் 39-வது முறையாக இந்த ஆண்டு அணை நிரம்புகிறது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த அரிய காட்சியினை பார்க்க பொதுமக்கள் குடும்பத்தினருடன் ஆர்வமாக மேட்டூரில் குவிந்துள்ளனர்.