1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : திங்கள், 29 ஜூன் 2015 (09:33 IST)

கோயம்பேடு - ஆலந்தூர் மெட்ரோ ரயில் சேவை: ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்

ஆலந்தூர்-கோயம்பேடு இடையேயான மெட்ரோ ரயில் சேவையை, தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.


 

 
ரூ.14 ஆயிரத்து 600 கோடி மதிப்பில் சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முதல் வழித்தடமான வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை 23.05 கிலோ மீட்டர் தூரத்துக்கும், 2 ஆவது வழித்தடமான சென்டிரல் முதல் பரங்கிமலை வரை 22.50 கிலோ மீட்டர் தூரத்துக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 
 
இதில் சுரங்கப்பாதையில் 16 ரயில் நிலையங்களும், உயர்த்தப்பட்ட பாதையில் 16 ரயில் நிலையங்கள் என 32 ரயில் நிலையங்கள் அமைக் கப்பட்டு வருகின்றன.
 
முதல் கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சதீஷ்குமார் மிட்டல் ஆய்வு செய்து, பயணிகள் சேவையை தொடங்குவதற்கான சான்றிதழை வழங்கினார்.
 
இதைத் தொடர்ந்து, ஆலந்தூர்-கோயம்பேடு இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கப்படுகிறது. தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் மெட்ரோ ரயில் சேவையை மதியம் 12 மயியளவில் தொடங்கி வைக்கிறார்.
 
அத்துடன் அந்த வழித்தடத்தில்லுள்ள கோயம்பேடு, கோயம்பேடு பேருந்து நிலையம், அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுதாங்கல், ஆலந்தூர் ஆகிய 7 ரயில் நிலையங்கள் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் பணிமனை ஆகியவற்றையும் முதலமைச்சர் திறந்து வைக்கிறார். 
 
மெட்ரோ ரயில் போக்குவரத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்ததும், முதல் மெட்ரோ ரயில் ஆலந்தூரில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கோயம்பேடுக்குச் செல்லும், அதேபோன்று கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் நோக்கி மற்றொரு மெட்ரோ ரயில் புறப்பட்டுச் செல்லும். 
 
தினசரி காலை 5 மணியில் இருந்து இரவு 12 மணி வரை தொடர்ந்து 19 மணி நேரம் மெட்ரோ ரயில் இயக்கப்படும். அலுவலக நேரங்களில் 4.5 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், மற்ற நேரங்களில் 10 முதல் 15 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படும். பயணிகளின் கூட்டத்தை பொறுத்து 2.5 நிமிடங்களுக்கு ஒரு ரயிலை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், கோயம்பேடு-ஆலந்தூர் இடையே 10.1 கிலோ மீட்டர் தூரத்தை 18 நிமிடங்களில் ரயில் கடக்கும். ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் 30 வினாடி ரயில்கள் நின்று செல்லும். ஒவ்வொரு ரெயிலிலும் 176 இருக்கைகளும், 1,100 பேர் நின்று செல்லும் வகையிலும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு மார்க்கத்தில் ஒரு மணி நேரத்தில் 30 ஆயிரம் பேர் பயணம் செய்ய முடியும்.
 
இந்த மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதற்கான கட்டண விவரம் அனைத்து ரயில் நிலையங்களிலும் தகவல் பலகையில் ஒட்டப்படும் என்று மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மெட்ரோ ரயில் நிலையங்கள் பிரமாண்டமான முறையில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் 2 ஏ.டி.எம். எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
 
குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டிகள், தடையற்ற மின்சார வசதி, குறைந்த பயண நேரம் போன்ற வசதிகளை மெட்ரோ ரெயில் கொண்டு உள்ளது. அனைத்து ரயில் நிலையங்களுமே 2 ஆவது மாடியில்தான் அமைந்துள்ளன.
 
இந்நிலையில், வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பயணிகள் எளிதாக ரயிலில் ஏறுவதற்காக தரைதளத்தில் இருந்து லிப்ட் மற்றும் நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு லிப்டில் 13 நபர்கள் செல்லலாம்.
 
மாற்றுத்திறனாளிகளின் சக்கர நாற்காலிகளை நிறுத்தும் வசதியும், பார்வையற்றவர்கள் லிப்டை எளிதாக இயக்கும் வண்ணம் பிரெய்லி பொத்தான்களும், தானியங்கி மீட்பு சாதன வசதிகளும் அமைக்கப் பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.