வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 28 ஆகஸ்ட் 2015 (13:07 IST)

மணி மண்டபம் எழுப்பிய ஜெயலலிதாவின் செயல் பாராட்டுக்குரியது - வைகோ

வீரபாண்டிய கட்டபொம்மன் சிறை வைக்கப்பட்டு, தற்போது இடிந்து கிடக்கும் கட்டடத்தை அகற்றி, அதே இடத்தில் ஒரு மண்டபம் அமைத்து, அதில் அந்த வரலாற்றுச் சம்பவத்தை கல்வெட்டில் பொறிக்க தமிழக அரசு முன்வரவேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
ஆகஸ்ட் 27 ஆம் தேதி அன்று, கயத்தாறு சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அங்கு தமிழக அரசு அமைத்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் மணி மண்டபத்தை ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆர்வமுடன் பார்வையிட்டார்.
 
பின்பு அங்கு வைக்கப்பட்டிருந்த குறிப்பேட்டில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது கைப்பட எழுதியதாவது:-
 
பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பை எதிர்த்து தென்னாட்டில்  - (பிரிட்டிஷ் நிர்வாகம் அமைந்த பிறகு முதல் முதலில்) கப்பம் கட்டாமல் வரி செலுத்த மறுத்து மரணத்தைத் துச்சமாகக் கருதி வாளுயர்த்திப் போரிட்டு, இந்தக் கயத்தாறில் 1799 அக்டோபர் 16 இல் வீரபாண்டிய கட்டபொம்ம மன்னர் தூக்கிலிடப்பட்டார்.
 
புதுக்கோட்டை தொண்டைமானின் துரோகத்தால் கைது செய்யப்பட்டு, கைகளுக்கும் கால்களுக்கும் விலங்கிடப்பட்டு, கால் நடையாகவே வீரபாண்டிய கட்டபொம்மனையும், மாவீரத்தம்பி ஊமைத்துரையையும் கயத்தாறுக்கு கொண்டுவந்த ஆங்கிலேயர்கள், கயத்தாறில் தற்போது காவல்நிலையம் அருகே கிழந்து கிடக்கும் மண்டபத்தில் சிறை வைத்தனர்.
 
அந்தக் கட்டடத்தில் இருந்து கட்டபொம்மனை விசாரணையிடத்துக்கு கொண்டு வர, பிரிட்டிஷ் தளபதி மேஜர் பானர் மேனன்  ஐந்து குற்றச்சாட்டுகளை கட்டபொம்மன் மீது வைத்தார். அஞ்சாத சிங்கமாகக் கட்டபொம்மன் பதிலளித்தான்.
 
இங்குள்ள கட்டைப் புளியமரத்தில் கட்டபொம்மன் தூக்கிலிட்டதைப் பார்த்துவிட்டு பானர் மேனன் சொன்னார், “அங்கிருந்த பாளையக்காரர்களை ஏளனமாகப் பார்த்து நகைத்துவிட்டு, வீரம் செறிந்த நடை நடந்து தூக்குக் கயிற்றை தன் கழுத்தில் மாட்டிக் கொண்டு காலத்தால் அழியாத புகழை நாட்டிச் சென்றார் உடலால் உயிரால் அம்மாவீரன்” என்று.
 
ஆண்டுதோறும் அக்டோபர் 16 இங்கு வந்து நான் கட்டபொம்மனுக்கு புகழஞ்சலி செலுத்துகிறேன். வீரபாண்டிய கட்டபொம்மன் அடைக்கப்பட்டிருந்த இடத்தை இடித்து ஒரு மணி மண்டபம் அங்கு எழுப்பப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறேன்.
 
தற்போது இந்த மணி மண்டபம் மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. கட்டபொம்மன் சிலையும் கம்பீரமாக வடிக்கப்பட்டுள்ளது. வேட்டை நாயை முயல் விரட்டும் காட்சியும், கட்டபொம்மன் பட்டாபிஷேகமும் சித்திரங்காளகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.
 
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின், ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படம் அழியாத புகழை தமிழர்களின் இதயத்தில் எழுதியது. கட்டபொம்மனாகவே காட்சி அளித்தார் நடிகர் திலகம். அவரது சொந்தச் செலவில் இடம் வாங்கி கட்டபொம்மன் சிலை எழுப்பிக் கொடுத்தார். காமராசர் தலைமையில், நீலம் சஞ்சீவிரெட்டி அவர்களைக் கொண்டு சிலையைத் திறக்கச் செய்தார்.
 
இங்கு மணி மண்டபம் எழுப்பிய தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா செயல் பாராட்டுக்குரியதாகும். அதே போன்று கட்டபொம்மன் சிறை வைக்கப்பட்டு, தற்போது இடிந்து கிடக்கும் கட்டடத்தை அகற்றி, அதே இடத்தில் ஒரு மண்டபம் அமைத்து, அதில் அந்த வரலாற்றுச் சம்பவத்தை கல்வெட்டில் பொறிக்க தமிழக அரசு முன்வரவேண்டும் என்றும், வாழ்க வீரபாண்டிய கட்டபொம்மன் புகழ் என்றும்  அந்த குறிப்பேட்டில் குறிப்பிட்டுள்ளார்.