மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டியது மன்மோகன் சிங் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய வீடியோ வைரலாகியுள்ளது.
மதுரையில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட முடிவான நிலையில் கடந்த 2019ம் ஆண்டில் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி மதுரை வந்த பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொண்டு முதல் செங்கல்லை வைத்தார்.
ஆனால் அதன்பின்னர் இன்று வரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான எந்த பணிகளும் நடைபெறாமல் இருந்து வருவது அடிக்கடி சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படாததை திமுக ஒரு பிரச்சார யுக்தியாகவே கையாண்டது.
இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான பணிகள் திமுக முன்னர் ஆட்சி செய்த காலத்திலேயே தொடங்கப்பட்டதாகவும், அப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்த நிலையில் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டி எய்ம்ஸ் கட்டுமான பணிகளை தொடங்கி வைத்ததாகவும் பேசியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.
Edit by Prasanth.K