திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 23 ஜூன் 2016 (10:54 IST)

’மகாராஜ்’ யானை பலியான விவகாரம் - அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு

’மகராஜ்’ யானை பலியான விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

 
கோவை மதுக்கரை அருகே பிடிபட்ட ஒற்றை யானை சில ஆண் யானைகளுடன் சேர்ந்து மக்களை அச்சுறுத்தி வந்தது. இதனையடுத்து கடந்த 19ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு 18 வயதான ஆண் காட்டு யானையை,  வனத்துறையினர் கும்கி யானைகள் மற்றும் மருத்துவர்களின உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
 
பிடிக்கப்பட்ட ஒற்றையானை பொள்ளாச்சி வரகழியாற்றில் கூண்டில் அடைக்கப்பட்டது. இந்நிலையில் அந்த யானை உடல் நலக்குறைவு காரணமாக இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
யானை இறந்துவிட்டதாக கூறுவதை ஏற்க முடியாது என்றும் அது கொல்லப்பட்டது என்றும் வன விலங்கு ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
 
யானையைப் பிடிக்கும்போது கையாளப்படும் நடைமுறைகள் குறித்து அறிந்து கொள்ள தொடக்கம் முதலே சூழலியல் ஆர்வலர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்த யானையின் இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன.
 
மீண்டும் மீண்டும் அதிகளவு மயக்க ஊசி செலுத்தியதால், உணவு இல்லாமல், மயக்க மருத்தின் சக்தியை தாங்க முடியாமல், கூண்டுக்குள் அடைபட்ட சித்திரவதையை தாங்கமுடியாமலும் மகராஜ் இறந்ததால், இந்த மரணம் வனத்துறையின் திட்டமிட்ட கொலை என்றே கூறப்படுகிறது.
 
இதுகுறித்து யானைகள் ஆர்வலர் வினோத்குமார் கூறுகையில், ”உரிய விசாரணை நடத்தவும், வழித்தடங்களை ஆக்கிரமித்திருப்பவர்களின் பட்டியலைத் தயாரித்து நடவடிக்கை எடுப்பதும் உடனடித் தேவை” என்று கூறியுள்ளார்.
 
இது குறித்து விளக்கம் அளித்துள்ள வனவிலங்கு அதிகாரிகள், ‘கூண்டில் அடைக்கப்பட்டதால் தனிமையை விரும்பவில்லை. யானையின் மனநிலை பாதிக்கப்பட்டது. 2ல் இருந்து 3 நாள் வரை உணவு, தண்ணீர் எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை. இதனால், திடீரென இறந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில், நேற்று வக்கீல் தீபிகா என்பவர் சென்னை நீதிமன்றத்தில் ஆஜராகி, ‘கோவை மதுக்கரையில் வனத்துறையினரால் பிடிப்பட்ட யானையின் இறப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் அரசுக்கு உத்தரவிடவேண்டும்.
 
இதுதொடர்பாக வழக்கு தொடர அனுமதி அளிப்பதுடன், அந்த வழக்கை அவசர வழக்காகவும் எடுத்து விசாரிக்கவேண்டும்’ என்று வாதிட்டார். இதையடுத்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் நேற்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.