1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: வெள்ளி, 29 ஆகஸ்ட் 2014 (11:57 IST)

நில அபகரிப்பு வழக்கில் மு.க.அழகிரிக்கு முன் ஜாமீன்

இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் மு.க.அழகிரிக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால முன்ஜாமீன் வழங்கியது.
 
மதுரை மாவட்டம், சிவரக்கோட்டையில் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீது மதுரை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இவ் வழக்கில், போலீஸார் கைது செய்யாமல் இருக்க தனக்கு முன்ஜாமீன் அளிக்கும்படி கோரி மு.க.அழகிரி மனுத் தாக்கல் செய்தார். மனுவில், சிவரக்கோட்டையில் அருள்மிகு விநாயகர் கோவிலுக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்துள்ளதாக இந்துசமய அறநிலையத் துறையினர் என்மீது புகார் செய்துள்ளனர். மு.க.அழகிரி கல்வி அறக்கட்டளை மூலம் ஏழை மாணவர்களுக்கு கல்வி அளிப்பதற்காக சிவரக்கோட்டையில் தயா பொறியியல் கல்லூரி கட்டப்பட்டது. கடுமையான போராட்டத்துக்கு பிறகே கல்லூரிக்கு இணைவிப்பு பெறப்பட்டுள்ளது.
 
கல்லூரி அருகே ஆக்கிரமித்ததாக கூறப்படும் 44 சென்ட் நிலத்தை சம்பத் என்பவரிடம் இருந்து வாங்கினோம். அந்த இடம் ஆதிலட்சுமி என்பவரிடம் இருந்து வேலுச்சாமி பண்டாரம் என்பவர் நிலப் பரிமாற்ற முறையில் பெற்றிருந்தார். பிறகு அவரிடமிருந்து சம்பத் என்பவர் பெற்றதாகும். எனவே, நிலம் வாங்கியதில் ஒளிவுமறைவு இல்லை. கோவில் நிலத்தை நாங்கள் ஆக்கிரமிக்கவில்லை. மேலும், இதுதொடர்பாக ஏற்கெனவே கீழமை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
 
இந்த மனு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மு.க.அழகிரிக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கினார். மனு மீதான விசாரணையை வரும் செப்டம்பர் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.