1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வியாழன், 26 நவம்பர் 2015 (13:10 IST)

காதல் விவகாரம்: காவல் துறையினருக்குப் பயந்து வேகமாக சென்றபோது கார் மரத்தில் மோதி இருவர் பலி

காதல் விவகாரத்தில் காவல்துறையினருக்குப் பயந்து காரில் வேகமாகச் சென்றபோது, ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர், மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர்.


 

 
தேனி மாவட்டம் அல்லிநகரத்தை சேர்ந்த முருகனின் மகன் சிவபாண்டியன். 25 வயதுடைய இவர் அதே பகுதியைச் சேர்ந்த கண்ணுசாமி என்பவர் மகள் கமலாவை காதலித்து வந்தார்.
 
இது குறித்து கமலாவின் பெற்றோருக்குத் தெரியவந்ததைத் தொடர்ந்து அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
அத்தடன், மகளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இதனால் அந்த காதலர்கள் திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தனர்.
 
இந்நிலையில், காதலர்கள் வீட்டைவிட்டு ஓடினர். இதனை அறிந்த கமலாவின் பெற்றோர் தங்களது மகளை சிவபாண்டியன் கடத்திச் சென்றுவிட்டதாக தேனி அல்லிநகரம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
 
சிவபாண்டியன் கமலாவுடன் கம்பம் அருகே காமயகவுண்டன் பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பதாக கமலாவின் தந்தைக்கு தகவல் கிடைத்தது.
 
இதையடுத்து அவர் உறவினர்கள் சிலருடன் காரில் அங்கு சென்று தேடினார். இதையறிந்த சிவபாண்டியனின் தம்பி பிரபு தனது அண்ணன் ஆபத்தில் இருப்பதை அறிந்து, தனது நண்பர்கள் சிலருடன் ஒரு காரில் அங்கு சென்றார்.
 
அவர்கள் கம்பம் அருகே சென்றபோது, பெண்ணின் தந்தை அந்த காரைப் பாத்துள்ளார். இதனால், தனது மகள் அந்த காரில் இருப்பதாக நினைத்து காரை வழிமறித்துள்ளனர்.
 
இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பிரபுவும் அவர்களது நண்பர்களும் அங்கிருந்து காரில் தப்பிச் சென்றனர்.
 
இந்நிலையில், தனது மகளை பிரபு உள்ளிட்டோர் காரில் கடத்திச் செல்வதாக புகார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, உத்தமபாளையம் பகுதி சோதனைசாவடி காவலர்களுக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது.
 
இதையறிந்த பிரபு காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க அண்ணாபுரம், காப்புபட்டி வழியாக உத்தமபாளையம் நோக்கிச் சென்றனர்.
 
அப்போது தங்களது வாகனத்தை காவல்துறையினரின் வாகனம் பின் தொடர்வதை அறிந்த பிரபு காரை வேகமாக ஓட்டியதால் அந்த கார் சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் மோதியது.
 
இந்த விபத்தில், காரில் சென்ற பிரபுவின் நண்பர்களான பாபு, ஆதவன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பிரபு, சதீஸ், மகேஷ், சாமுவேல் ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
 
காயமடைந்தவர்கள் அனைவரும் தேனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்கையளிக்கப்பட்டு வருகின்றது.
 
இந்நிலையில், இந்த சம்பவத்தை அறிந்த காதலர்கள் கம்பம் காவல்துறையினரிடம் தஞ்சம் அடைந்தனர்.
 
இதைத் தொடர்ந்து, அவர்கள் தேனி அல்லிநகரம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட கமலா, சிவபாண்டியனை தான் காதலித்து வருவதாகவும். அவர் தன்னை கடத்தவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், அவருடன், தான் விரும்பி சென்றதாகவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.