1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 22 செப்டம்பர் 2018 (17:13 IST)

விழுந்தது அடுத்த இடி: லாரிகள் வாடகை உயர்வு

தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையினால் லாரிகளின் வாடகைக் கட்டணத்தை 22% உயர்த்தப் போவதாக தமிழ்நாடு லாரி முன்பதிவு முகமைகள் சம்மேளனம் அறிவித்துள்ளது.



டீசல் மற்றும் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்து வரலாறு காணாத விலையில் விற்கப்படுகின்றன. இதனால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். அவர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியாக லாரிகளின் வாடகை உயர்வு என்ற அறிவிப்பு தற்போது வந்துள்ளது.

சமீபத்தில் தமிழ்நாடு லாரி முன்பதிவு முகமைகள் சம்மேளனத்தின் மகாசபை கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட லாரி உரிமையாளர்கள் தொடர்ந்து உயர்ந்து வரும் டீசல் விலை உயர்வால் அதிகப்படியான நஷ்டம் ஏற்படுவதாகவும் அதனால் வாடகை கட்டணத்தை உயர்த்த வேண்டுமெனவும் கூறினர். கூட்டத்தின் முடிவில் லாரிகளின் வாடகை கட்டணத்தை 22% சதவீதம் உயர்த்துவதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த வாடகை உயர்வு நாளை மறுநாள் முதல் (செப்-24) அமலுக்கு வரும் என்றும் வியாபாரிகள் மற்றும் ஆலை உரிமையாளர்கள் இந்த வாடகை உயர்வை ஏற்றுக்கொண்டு ஆதரவு தர வேண்டுமென லாரி உரிமையாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.  இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையில் ஏற்றம் ஏற்படுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.