1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 2 ஜூன் 2017 (14:43 IST)

வசைபாடியவர்களும் வாழ்த்தும் கலைஞர் கருணாநிதி....

கருணாநிதியின் 94வது பிறந்த நாள் விழா மற்றும் சட்டசபை பணி வைர விழா வருகிற ஜூன் மாதம் 3ம் தேதி, சென்னை ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக சார்பில் கொண்டாடப்படுகிறது.


 

 
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாதவர் கருணாநிதி. அவரை சுற்றியே தமிழக அரசியல் எப்போதும் இருக்கும். நாளை அவர் தனது 94வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். மேலும், சட்டமன்ற உறுப்பினராக அவர் 60 வருடத்தை கடந்துள்ளார். இதில் முக்கிய விஷயம், அவர் கடந்த 60 வருடங்களாக தோல்விகளையே சந்திக்காமல் சட்டபை உறுப்பினராக தொடர்ந்து கொண்டிருக்கிறார். இது இந்திய அரசியலில் எவரும் அடைய முடியாத சாதனை. அதனால், அவருடைய பிறந்த நாளோடு சேர்த்து, சட்டசபை பணி வைர விழாவும் ஜூன் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது.
 
திமுகவின் அடிப்படை கொள்கையிலேயே முரண்படும் பாஜக, கலைஞரின் வைர விழாவிற்கு தங்களை அழைக்கவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படையாகவே தெரிவித்தது. அதுதான் கலைஞர் கருணாநிதி.
 
தமிழகத்தில் உள்ள பல அரசியல் தலைவர்கள் பலரும் அவரை எதிர்க்கலாம். ஆனால், அவரை ஒதுக்கி வைத்து விட முடியாது. அவர்  மீது நெருப்பை உமிழலாம். ஆனால், அவரை வெறுத்து விட முடியாது. காரணம், இத்தனை வருட அரசியல் வாழ்வில் அவர் கடந்து வந்த பாதை, அவரின் தமிழ்,  அவரின் எழுத்து, அவரின் இலக்கியம், அவரின் பேச்சு, அவரின் உழைப்பு, அவரின் அரசியல் அணுகுமுறை, அவரின் சாதனை என்பதை யாரும் மறுக்க முடியாது.


 

 
கலைஞருக்கு எதிராக அரசியல் தொடங்கிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது முதல் அழைப்பிதழை கலைஞருக்குதான் கொடுத்தார். கருணாநிதி பற்றி விமர்சித்து அவர் பல மேடைகளில் பேசினாலும், அவர் மீது விஜயகாந்த்திற்கு பெரும் மதிப்பு உண்டு. அதனால்தான், இன்று கலைஞருக்கு ஒரு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். அந்த வாழ்த்து செய்தி செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : 
 
94 வது பிறந்த நாள் மற்றும் சட்டப்பேரவையின் 60 வது ஆண்டு விழா கொண்டாடும் உயர்திரு. மதிப்பிற்குரிய கலைஞர் அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
 
இந்தியாவிலேயே மிக மூத்த அரசியல் தலைவர் என்ற பெருமைக்குரியவராக இன்றைக்கும் கலைஞர் அவர்கள் மட்டும்தான் இருக்கிறார். அதுபோல் எத்தனையோ அரசியல்வாதிகள் இருந்தாலும், கலைஞருடைய அரசியல் அனுபவமும், அரசியல் தலைவர்களுடைய வயதும் சமமாக இருக்கிறது. இன்னும் பல ஆண்டுகள் நீண்ட ஆயுளுடனும், உடல் ஆரோக்கியத்துடன் இருந்து மக்களுக்கும், நாட்டுக்கும் சேவை செய்ய வேண்டும். உங்களுடைய பிறந்தநாள் விழாவும், சட்டபேரவையின் வைரவிழாவும் வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அதேபோல், திமுக மற்றும் கலைஞர் கருணாநிதி  பற்றி கடுமையாக விமர்சிக்கும் பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் “ திமுக தலைவர் கலைஞரின் 94-ஆவது பிறந்தநாள் விழாவும், சட்டப்பேரவை வைரவிழாவும் நாளை கொண்டாடப்படுவதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியும், மனநிறைவும் அடைகிறேன். 94&ஆவது பிறந்த நாள் காணும் நண்பர் கலைஞருக்கு உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
தமிழகத்தில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவிலும் மிக நீண்ட அரசியல் பயணம் கலைஞருடையது தான். திருவாரூர் மாடவீதிகளில் 14 வயதில் தொடங்கிய அவரது அரசியல் பயணம் ஈரோடு, காஞ்சிபுரம் வழியாக 80 ஆண்டுகளைக் கடந்து கோபாலபுரத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 4 தலைமுறை தலைவர்களுடன் அரசியல் செய்து வரும் பெருமை கலைஞருக்கு மட்டுமே உண்டு.


 

 
கலைஞருக்கும், எனக்கும் அரசியல்ரீதியாக ஆயிரம் கருத்து வேறுபாடுகள் உண்டு. தமிழகத்தின் நலனுக்காக செயத்தக்கவையை செய்யாமைக்காகவும், செயத்தக்க அல்லவற்றை செய்தமைக்காகவும் கலைஞரை நான் பலமுறை உரிமையுடன் விமர்சித்திருக்கிறேன். அந்த விமர்சனங்களை கலைஞர் ரசித்து இருக்கிறாரே தவிர, ஒருபோதும் வெறுத்தது கிடையாது. அதேநேரத்தில் தமிழகத்திற்கு தேவையான சீர்திருத்தங்களை மேற்கொண்டதில் தந்தைப் பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் வழியின் கலைஞர் செய்த பங்களிப்பை ஒருபோதும் நான் மறுத்ததில்லை; அதை எவரும் மறுக்கவும் முடியாது.
 
தமிழகத்தைக் கடந்து அகில இந்திய அரசியலிலும் கலைஞர் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். பொதுவாழ்வில் 80 ஆண்டுகளைக் கடப்பதும், சட்டப்பேரவை உறுப்பினராக வைரவிழா காண்பதும் பெரும் பேறு. அப்பேறு நண்பர் கலைஞருக்கு கிடைத்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி. பொது வாழ்வில் நூற்றாண்டை கடந்தும் அவர் சேவையாற்ற வேண்டும் என்று கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
 
இப்படி வசைபாடியவர்களும் வாழ்த்தும் இடத்தில் இருக்கிறார் கலைஞர் கருணாநிதி. 
 
அனைவரோடு சேர்ந்து நாமும் வாழ்த்துவோம்.