வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 24 மார்ச் 2015 (12:35 IST)

நரேந்திர மோடி ஆட்சியில் இந்தியாவில் வாழ்வதற்கே பயமாக உள்ளது: நடிகை குஷ்பு

நரேந்திர மோடி தலைமையிலான, ஆளும் பாஜக ஆட்சியில் இந்தியாவில் வாழ்வதற்கே பயமாக உள்ளது என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
 
திருச்சி மாவட்ட காங்கிரஸ் சார்பில் மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
 
இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பு பேசியதாவது:–
 
பாஜக அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையகப்படுத்தும் சட்டம் விவசாயிகளின் உரிமையை பறிக்கும் சட்டம் ஆகும். வெள்ளைக்காரர்கள் ஆட்சி காலத்தில் இது போன்று விவசாயிகளை பாதிக்கும் நிலம் கையகப்படுத்தும் சட்டம் இருந்தது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் இதில் மாற்றத்தை ஏற்படுத்தியது.
 
ஆனால் இந்திய மக்களுக்கு நல்லாட்சி தருவேன் என்று கூறி பதவிக்கு வந்த நரேந்திர மோடி அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் வகையில் ஆட்சி நடத்துகிறார். காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது அனைத்து சமூக மக்களும் பாதுகாப்போடு இருந்தார்கள்.
 
ஆனால் தற்போது இந்தியாவில் வாழ்வதற்கே பயமாக உள்ளது. மத கலவரத்தை தூண்டுவது போல் பேசும் தலைவர்களை நரேந்திரமோடி கண்டிப்பது இல்லை. இப்போது விவசாயிகளையும் பாதிக்கும் வகையில் சட்டத்தை கொண்டு வந்துள்ளார்.
 
விவசாயி சேற்றில் கை வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளிதான் விவசாயி. அந்த விவசாயியின் வாழ்க்கையை பாதிக்கும் வகையில் நிலம் கையகப்படுத்தும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
 
இந்த சட்டம் மூலம் ஒருவரது விவசாய நிலத்தை அரசு உதவியுடன் யாராவது அடைய நினைத்தால் அங்கு தொழிற்சாலை வருவதாக கூறி நிலத்தை கையகப்படுத்தி விட முடியும். இதனால் காவிரி டெல்டா மாவட்டம் டாடா, பிர்லா, அம்பானி மாவட்டம் என மாறி விடும். விவசாய நிலம் அழிந்தால் விவசாய தொழிலாளர்கள் நிலை கேள்விக்குறியாகி விடும்.
 
விவசாயிகளின் வலி மோடிக்கு தெரியவில்லை. அதனால்தான் விவசாயிகளின் உரிமையை பறிக்கும் இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளார். இந்த சட்டத்தை முதலில் எதிர்த்த அதிமுக நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றபோது ஏற்பட்ட அரை மணி நேர இடைவெளியில் முடிவை மாற்றிக்கொண்டு திடீரென ஆதரித்துள்ளது.
 
இதற்கு பின்னணியில் ஒரு காரணத்தை கூறுகிறார்கள். இதற்கு மக்கள் மன்றம்தான் பதில் அளிக்க வேண்டும். இந்த சட்டத்தை உயிர் உள்ளவரை எதிர்ப்போம். இந்திய எல்லையில் துப்பாக்கி ஏந்தி ராணுவ வீரர்கள் நாட்டை காப்பாற்றுகிறார்கள். இந்திய விவசாயிகள் நிலத்தில் ஏர் கலப்பையை பிடித்து நம்மை காப்பாற்றுகிறார்கள்.
 
எனவே விவசாயிகளை பாதிக்கும் இந்த சட்டத்தை காங்கிரஸ் தொண்டர்கள் எதிர்த்து கடைசி வரை போராடுவார்கள். காங்கிரஸ் மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. கடந்த 7 மாத ஆட்சியிலேயே பாஜக வின் பலம் என்ன என்பது தெரிந்து விட்டது.
 
டெல்லி தேர்தலில் மோடி அலை காணாமல் போய்விட்டது. வரும் 2016 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரசுக்கு கிடைக்கும் வெற்றி இந்தியா முழுவதும் எதிரொலிக்கும். இவ்வாறு நடிகை குஷ்பு பேசினார்.