வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: ஞாயிறு, 24 ஆகஸ்ட் 2014 (17:52 IST)

ஒரே மாதத்தில் 11 சிறார் தொழிலாளர்கள் மீட்பு: தொழிலாளர் நலத்துறை அதிரடி நடவடிக்கை

தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை காரணமாக, கடந்த ஒரு மாதத்தில் 11 சிறார் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தொழிலாளர் ஆணையர் மா. வீரசண்முக மணி வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:-

“சிறார் தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்களின் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளவும், சட்ட அமலாக்கத்தை தீவிரப்படுத்தவும், சென்னை மற்றும் திருவள்ளூர் உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறார் தொழிலாளர்கள் குறித்த ஆய்வுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் கடந்த ஜூலை 12 ஆம் தேதி சென்னை தியாகராய நகரில் உள்ள ஆந்திர உணவகத்தில் 3 சிறார் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டனர்.

ஆகஸ்ட் 20 ஆம் தேதியன்று சென்னை முகப்பேரில் உள்ள பழமுதிர் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 2 சிறார் தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

இதுபோல் விருதுநகர் மாவட்டத்தில் செங்கல் சூளையிலிருந்து 6 சிறார் தொழிலாளர்களை கடந்த வாரம் அதிகாரிகள் மீட்டனர். மீட்கப்பட்ட அனைவரும் பாதுகாப்பு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

14 வயதிற்குள்பட்ட சிறார்களைப் பணியில் அமர்த்துவது சட்டப்படி குற்றமாகும். இந்த ஆய்வுகள் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்படும்“ என அவர் தெரிவித்துள்ளார்.