இன்று ஒரே நாளில் இருவர் உயிரிழப்பு: குரங்கணி பலி 20ஆக உயர்ந்தது.
தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் சம்பவ தினத்தன்றே 9 பேர் உடல் கருகி பலியாகினர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த தீவிபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஒவ்வொருவராக பலியாகி வந்த நிலையில் இன்று காலை தஞ்சையை சேர்ந்த வசுமதி என்பவர் பலியானதால் பலி எண்ணிக்கை 19ஆக உயர்ந்தது.
இந்த நிலையில் இன்று மேலும் ஒருவர் பலியானதால் உயிரிழப்பின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. சென்னை சேர்ந்த நிவ்யா பிராக்ருதி என்பவர் கடந்த சில நாட்களாக மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்தார். இன்று ஒரே நாளில் இரண்டு பேர் பலியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த நிவ்யாவுக்கு அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.