வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 24 மார்ச் 2015 (11:02 IST)

தேயிலை பரித்துக்கொண்டிருந்த பெண்ணை கடித்துக் குதறிய கரடி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தேயிலை பரித்துக்கொண்டிருந்த பெண்ணை கரடி தாக்கியதில், அந்தப் பெண் துடிதுடித்து உயிரிழந்தார்.
 
நீலகிரி மாவட்டத்தில் மனிதர்களை விலங்குகள் தாக்குவது அதிகரித்து வருகின்றது. புதருக்குள் மறைந்திருக்கும் சிறுத்தை, கரடிகள் அவ்வப்போது நடத்தும் ஆவேச தாக்குதலால் பலரும் உயிரிழக்க நேருகிறது.
 
கோத்தகிரி அருகே தேயிலை பறித்துக்கொண்டிருந்த பெண்ணை கரடி தாக்கி கொன்ற சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியது.
 
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள தொத்தமுக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆலன். இவரது மனைவி மாதி. இவர்கள் அருகில் உள்ள தோட்டத்தில் தேயிலை பறித்துக்கொண்டிருந்தனர். அப்போது புதருக்குள் பதுங்கியிருந்த கரடி ஒன்று பாய்ந்து வந்தது.
 
வந்த வேகத்தில் அந்தக் கரடி மாதி மீது பாய்ந்து தாக்கியது. மனைவியை கரடி தாக்குவதைப பார்த்து அதிர்ச்சியடைந்த ஆலன் கூக்குரலிட்டார். சத்தம் கேட்டு அருகிலுள்ள தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் ஓடி வந்தார்.
 
அவர்கள் அங்குக் கிடந்த மரக்கட்டைகளை எடுத்து கரடி மீது வீசி விரட்ட முயன்றனர். ஆத்திரமடைந்த கரடி அவர்களையும் கடித்து குதறியது. பின்னர் அந்தக் கரடி மாதியை தரதரவென அருகில் உள்ள நீரோடைக்கு இழுத்க்ச் சென்றது. பின்னர் அங்கு வைத்து மாதியைக் கடித்துக் குதறியது.
 
அதனால் சம்பவ இடத்திலேயே மாதி துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தனது கண் எதிரே தன் மனைவி துடிதுடித்து இறந்ததைக் கண்டு ஆலன் துடிதுடித்தபடி கதறி அழுதார்.
 
தேயிலை பறிக்கச் சென்ற பெண்ணை கரடி தாக்கிக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் வேகமாகப் பரவியது. தீப்பந்தங்களுடன் கிராம மக்கள் சம்பவ இடத்துக்குத் திரண்டு வந்தனர்.
 
அவர்கள் மாதியின் உடல் அருகே படுத்திருந்த கரடியை 1 மணி நேரம் போராடி விரட்டியடித்தனர். இதைத் தொர்ந்து மாதியின் உடலை அவர்கள் மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
 
கரடி தாக்கியதில் காயமடைந்த ஆலன், குமார் ஆகிய இருவரும் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்ககுக் கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
 
இந்த நிலையில் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாதியின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
 
கூண்டு வைத்து கரடியை பிடிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இந்த நிலையில் மாதியின் குடும்பத்துக்கு கலெக்டர் சங்கர் ரூ. 3 லட்சம் நிவாரண நிதி வழங்கினார்.
 
மாதியை தாக்கிய கரடி மீண்டும் எந்த நேரத்திலும் ஊருக்குள் வரலாம் என்று பொதுமக்களிடையே அச்சமும் பீதியும் ஏற்பட்டுள்ளது. இதனால் தொத்தமுக்கை கிராம மக்கள் நேற்று இரவு தூங்கவில்லை.
 
எந்த நேரத்தில் என்ன நடக்குமோ? என்ற பீதியில் காணப்பட்டனர். தேயிலை பறிக்கச் சென்ற பெண் கரடி தாக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.