நெருங்கி வரும் புரெவி; போக்குவரத்துக்கு தடை விதித்த கொடைக்கானல்! – இன்று முதல் அமல்!
வங்க கடலில் உருவான புரெவி புயல் தமிழகத்தை நெருங்கி வரும் நிலையில் கொடைக்கானலில் வாகன போக்குவரத்துக்கு முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புரெவி புயலாக உருமாறியுள்ள நிலையில் இலங்கையின் திரிகோண மலையை கடந்து மன்னார் வளைகுடா வழியாக பாம்பன் அருகே நெருங்கி கொண்டுள்ளது. மணிக்கு 13 கி.மீ வேகத்தில் புயல் நகர்ந்து வரும் நிலையில் கொடைக்கானலில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
நாளை காலைக்குள் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் கொடைக்கானலில் பெய்து வரும் கனமழையால நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மலைப்பகுதிகளில் வாகனங்கள் செல்வது ஆபத்து என்பதால் இன்று மாலை 7 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை கொடைக்கானலில் அனைத்து விதமான போக்குவரத்து முடக்கப்படுவதாகவும், வெளியூர் வாகனங்கள் கொடைக்கானல் வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் சார் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.