வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 24 நவம்பர் 2014 (13:28 IST)

கோவையிலும் முத்தப் போராட்ட அறிவிப்பால் பரபரப்பு - வணிக வளாகம் மூடப்பட்டது

கோவையில் முத்தப் போராட்ட அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டது. தனியார் வணிக வளாகம் மூடப்பட்டது.
 
கடந்த மாதம் கேரள மாநிலத்தில் உள்ள தனியார் விடுதியில் நடனமாடிக் கொண்டிருந்த காதலர்கள் மீது பாஜக இளைஞர் அமைப்பான 'முக்தி மோர்ச்சா'-வை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து கொச்சியிலும், சென்னை ஐ.ஐ.டி.யிலும் முத்தப் போராட்டம் நடத்தப்பட்டது. இதற்குப் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.
 

 
இந்நிலையில் கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் முத்தப் போராட்டம் நடைபெறும் என்று சமூக வலைதளங்களில் நேற்று தகவல்கள் பரவின. இதற்கு இந்து முன்னணியினர் மற்றும் இந்து மக்கள் கட்சி உள்பட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. மேலும் முத்தப் போராட்டம் நடைபெறுவதாக இருந்த வணிக வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த இந்து அமைப்புகள் முடிவு செய்திருந்தன.
 
இதற்கிடையில் தனியார் வணிக வளாக நிர்வாகத்தினர் முத்தப் போராட்டம் நடத்த நாங்கள் யாருக்கும் அனுமதி கொடுக்கவில்லை. எனவே எங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று போலீசில் புகார் கொடுத்திருந்தனர். 
 
இதனை தொடர்ந்து கோவை அவினாசி சாலையில் உள்ள வணிக வளாகத்தில் நேற்று காலையில் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.
 
முத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம் என்று நினைத்த வணிக வளாக நிர்வாகத்தினர் காலையிலேயே மூடிவிட்டனர். மேலும், வளாக வாசலில் 'வணிக வளாகத்துக்கு விடுமுறை' என்ற அறிவிப்பு பலகையும் எழுதி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.