கொந்தளித்த நக்மா: அசால்ட்டாக பதில் சொன்ன குஷ்பு!

கொந்தளித்த நக்மா: அசால்ட்டாக பதில் சொன்ன குஷ்பு!


Caston| Last Modified திங்கள், 7 நவம்பர் 2016 (10:50 IST)
காங்கிரஸ் கட்சியில் குஷ்பு விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாக வெடித்து வருகிறது. பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாக குஷ்பு கருத்து கூறியது அந்த கட்சியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் குஷ்புவை நடிகை நக்மா மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் கடுமையாக விமர்சித்தார்.

 
 
முத்தலாக் பற்றி பேச குஷ்புவுக்கு அருகதையில்லை என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். சினிமாக்களில் பொட்டு வைத்து நடிக்கும் குஷ்பு நிஜ வாழ்க்கையிலும் பொட்டு வைக்கிறார். இந்துவை திருமணம் செய்துகொண்டுள்ளதால் தான் பொட்டு வைப்பதாக கூறிவார். இப்படிப்பட்டவர் ஷரியத் சட்டம் பற்றி பேசக்கூடாது.
 
மேலும் காலையில் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட குஷ்பு மாலையில் நடந்த கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளாதது குறித்து குற்றம் சாட்டிய நக்மா இது குறித்து மேலிடத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் கூறினார்.
 
இது குறித்து குஷ்புவிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். கூறிய பதில்கள்.
 
கேள்வி: மகளிர் காங்கிரஸ் கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளாதது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறதே?
 
பதில்: குஷ்பு என்ன சாப்பிடுகிறாள்? என்ன பேசுகிறாள்? யாருடன் பேசுகிறாள்? என்று என்னைப் பற்றி விமர்சிக்கவே ஒரு கும்பல் இருக்கிறது. நான் அகில இந்திய செயலாளர். எனக்கும் மாநில மகளிர் காங்கிரஸ் கூட்டத்துக்கும் சம்பந்தமே இல்லை என்பது வேறு விஷயம். மகளிர் காங்கிரஸ் கூட்டத்துக்கு என்னை கூப்பிடவில்லை. அதோடு எனக்கு படப்பிடிப்பு இருந்தது. ஷூட்டிங்கை இடையில் நிறுத்தி விட்டுத்தான் ஆர்ப்பாட்டத்துக்கு வந்தேன். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் மீண்டும் படப்பிடிப்புக்கு புறப்பட்டு சென்று விட்டேன்.
 
கேள்வி: நக்மா உங்களைப் பற்றி கடுமையாக பேசி இருக்கிறாரே?
 
பதில்: நான் கண்ணால் பார்க்கவும் இல்லை. காதால் கேட்கவும் இல்லை. எனவே அது பற்றி கருத்து கூற விரும்பவில்லை என்று அசால்ட்டாக பதில் கூறினார் குஷ்பு.


இதில் மேலும் படிக்கவும் :