தமிழகத்தில் விரைவில் காங்கிரஸ் கழட்டிவிடப்படும் - குஷ்பூ கணிப்பு!
எழுவர் விடுதலை தொடர்பாக சமீபத்தில் தமிழக காங்கிரஸ் – திமுக இடையே சலசலப்பு உருவான நிலையில் தேர்தலில் காங்கிரஸ் கழட்டிவிடப்படும் என குஷ்பூ கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்தெந்த கட்சிகள் யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. முன்னதாக மு.க.ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக கொண்டு தேர்தலை சந்திப்போம் என காங்கிரஸ் கூறியிருந்த நிலையில் திமுக, காங்கிரஸ் கூட்டணி சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள எழுவர் விடுதலை குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த அறிக்கைக்கு எதிராக பேசியிருந்த திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எழுவர் விடுதலையில் திமுக நிலைபாடு காங்கிரஸிலிருந்து மாறுபட்டது என கூறியிருந்தார். இதனால் இரு கட்சிகளிடையே சலசலப்பு நிலவியது.
இந்நிலையில் காங்கிரஸிலிருந்து சமீபத்தில் விலகி பாஜகவில் இணைந்த குஷ்பூ பேசியபோது “தமிழக சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் மிகப்பெரும் மாற்றங்கள் வர போகின்றன. காங்கிரஸ் சுமையாக கருதப்பட்டு கழட்டிவிடப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை” என கூறியுள்ளார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளன.