செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : திங்கள், 25 ஜூலை 2016 (17:01 IST)

காணாமல் போன மாவட்ட எம்.எல்.ஏ : கலெக்டரிடம் மனு கொடுத்த மக்கள்

தங்கள் பகுதி எம்.எல்.ஏ-வை காணவில்லை என்று கரூர் மாவட்ட மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்த விவகாரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 


கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ கீதா ஆவார். இவர் ஏற்கனவே கரூர் மாவட்ட பஞ்சாயத்து தலைவராக கீதா மணிவண்ணன் என்ற பெயரில் இருந்து வந்த நிலையில்., இவரது கணவர் மணிவண்ணன் நெரூர் வடபாகம் பஞ்சாயத்து நிதியில் மோசடி செய்ததாக கூறி, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஜெயந்தியால் பஞ்சாயத்து தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். 
 
இந்நிலையில் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் கரூர் மாவட்ட பஞ்சாயத்து தலைவராக பணியாற்றிய கீதா மணிவண்ணனை, கீதா என்று பெயரை சுருக்கி, கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ அ.தி.மு.க வேட்பாளராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார்.
 
இவர் அறிவிப்பையடுத்து அனைத்து பகுதிகளிலும் கீதா மணிவண்ணன் என்ற பெயர் கீதா என்று மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஏற்கனவே பெயர் சர்ச்சையில் சிக்கிய எம்.எல்.ஏ கீதா, வாக்குகள் சேகரிக்கும் போதுதான் மக்களை தேடி வந்தார் என்றும், தற்போது நன்றி தெரிவிக்க கூட வரவில்லை என்றும், மக்களின் குறைகளை கேட்க கூட எம்.எல்.ஏ கீதா இப்பகுதிக்கு வரவில்லை என்றும், திடீரென்று குற்றம் சாட்டி, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு தெரிவித்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


 

 
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குட்பட்ட, கடவூர் தாலுக்காவிற்குட்பட்ட பசுபதிபாளையம் பகுதியில் எந்த வித அடிப்படை வசதிகளையும் எம்.எல்.ஏ செய்து தரவில்லை, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சின்னத்தை நம்பிதான் நாங்கள் வாக்குகள் அளித்தோம், ஆனால் தற்போது அவர் காணாமல் போய் விட்டார் என்றும் குற்றம் கூறி மனு கொடுக்கப்பட்டது. 
 
மேலும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கின்றதே எப்படி எம்.எல்.ஏ வர முடியும் என்று பொதுமக்களிடம் கேட்டதற்கு ”இப்போதுதான் பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கிறது. அதற்கு முன்னர், ஏன் நேற்று ஞாயிறு, நேற்று முன் தினம் சனிக்கிழமை அப்போது மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னர் எங்கே சென்றார் எம்.எ.ஏ? நாங்கள், கீதாவோ, கீதா மணிவண்ணனையோ நம்பி வாக்களிக்க வில்லை. அம்மாவின் சின்னத்தையும், அம்மாவின் சாதனைகளையும் புரிந்து தான் வாக்களித்தோம், தற்போது அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்க வில்லை என்பதற்காக எங்களை பழிவாங்குவது போல் செயல்படுகின்றார்.
 
அ.தி.மு.க கட்சிக்கு என்று ஒரு புதிய கட்டுக் கோப்பு உள்ளது. இவர் அ.தி.மு.க வின் மரபுகளை மீறியும், அ.தி.மு.க வையும், அம்மாவின் புகழை அளிக்கும் வகையில் இவர் செயல்பட்டு வருகிறார்” என்று அவர்கள் கூறினர்.
 
மேலும், அப்பகுதி மக்கள் விரைவில் அப்பகுதி சார்பில் அ.தி.மு.க எம்.எல்.ஏ விற்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்களை நடத்த உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள். மேலும் ”ஏற்கனவே எம்.எல்.ஏ வாக இருந்த இதே அ.தி.மு.க வை சார்ந்த எஸ்.காமராஜ், தனது மாத சம்பளத் தொகைகளை ஏழை, எளியவர்களுக்கெல்லாம் கொடுத்து வாரம் ஒரு முறை எங்களை வந்து பார்ப்பார். ஆனால் இவரை கேட்டால் எதுவும் தெரியவில்லை” என்கின்றன் அப்பகுதி மக்கள்.

சி.ஆனந்தகுமார் - செய்தியாளர்