வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 8 பிப்ரவரி 2016 (15:31 IST)

பொள்ளாச்சி போய் புளியம்பட்டி போகலாமா? : கரூரில் சுவாரஸ்யம்

கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், கரூர் மாவட்ட ஆட்சியரும் ஒன்றாக பேருந்தில் பயணித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.


 
 
தமிழக முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இன்று தமிழகம் முழுவதும் 701 பேருந்துகள், 65 சிற்றுந்துகள் என மொத்தம் ரூ.144.37 கோடி மதிப்பிலான போருந்துகளையும், இந்தியாவிலேயே முதன்முறையாக பெண்களுக்கான இரு சக்கர வாகனங்களாக 31 மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் மற்றும் 10 ஸ்கூட்டர் ஆம்புலன்ஸ்களையும், கொடியசைத்து துவக்கி வைத்தார். 
 
இந்த நிகழ்ச்சியையொட்டி கரூர் மண்டலத்திற்குட்பட்ட கரூர் கிளை, முசிறி கிளை, அரவக்குறிச்சி கிளைகளை சார்ந்த அரசுப் பேருந்துகள் 11 பேருந்துகள் கரூர் மண்டல அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. 
 
இந்நிலையில் முதல்வர் ஜெ கொடியசைத்து துவக்கி வைத்த போது, கரூர் மண்டல அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ், அ.தி.மு.க மாவட்ட செயலாளர் எம்.ஆர்.விஜபாஸ்கர் ஆகியோர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். 
 
மேலும் புதிய பேருந்துகளை இயக்கியவர்களுக்கு இனிப்புகளை வழங்கியவர்கள் திடீரென அந்த புதிய பேருந்துகளில் பயணித்தனர். கரூர் மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ், மாவட்ட அ.தி.மு.க செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் ஒரே சீட்டில் இருவர் உட்காரும் இடத்திலேயே உட்கார்ந்திருந்தார்.
 
கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ எஸ்.காமராஜ், கரூர் நகர செயலாளர், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சுந்தர்.ஜி, ஆயில் ரமேஷ், கரூர் நகர்மன்ற தலைவர் தமிழ்நாடு செல்வராஜ் என பல்வேறு அ.தி.மு.க நிர்வாகிகளும், கரூர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லெ.பாண்டி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்களும் ஒன்றாக பயணித்தது நிருபர்களிடம் மட்டுமில்லாமல் மக்களிடையேயும் வரவேற்பை பெற்றுள்ளது. 
 
சூர்ய வம்சம் படத்தில் வருவது போல பொள்ளாச்சி போய் புளியம்பட்டி போகலாமா? என பேருந்தில் பயணிக்கும் பயணியிடம் காமெடி நடிகர் மணிவண்ணன் கேட்ட காட்சி போல, கரூர் பேருந்து நிலையம் போகலாமா சார்.. இல்லை கலெக்டர் அலுவலகம் போகலாமா? என மாவட்ட செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேட்க,  அதற்கு மாண்புமிகு அம்மா ஆட்சியில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்றார்.
 
இந்த நிகழ்ச்சி பொதுமக்களிடம் மட்டுமில்லாமல், அரசுப்பேருந்து ஊழியர்களையும் மகிழ்ச்சியில் உரையவைத்துள்ளது.