வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : ஞாயிறு, 29 மே 2016 (07:48 IST)

தேர்தல் ஆணையத்திற்கு கருணாநிதி திடீர் கோரிக்கை

தேர்தல் ஆணையத்திற்கு கருணாநிதி திடீர் கோரிக்கை

ஜனநாயக ரீதியிலும் நேர்மையான முறையிலும், நியாய வழியிலும்  தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலை நடத்துவதற்கு இனியாவது தேர்தல் ஆணையம் முன் வர வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
இது குறித்து, திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் நடந்திருக்க வேண்டிய தேர்தலை இன்னும் ஏன் நடத்தவில்லை என்று, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒவ்வொரு நாளும் சென்னையிலே உள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டும், நீதி மன்றத்திலே முறையிட்டு வழக்கு தொடர்ந்தும், இன்றைக்கு நாளைக் கென்று தேர்தல் தேதியை அறிவித்து விடுவதாக அதிகாரிகள் சொல்லி வந்தனர்.
 
ஆனால் இன்றைய தினம் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திகளைப் பார்க்கும்போது, ஆளுங்கட்சியான அதிமுகவின் சார்பில் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைப்பது இன்னமும் நிற்கவில்லை என்றும், தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் தெளிவாகத் தெரிகிறது.
 
இதனையடுத்து, இந்த இரண்டு தொகுதி தேர்தல்களையும் அறவே ஒத்தி வைத்து விட்டு, ஏற்கனவே குறிப்பிட்ட தேதிக்கு மாறாக வேறு தேதியில் இந்தத் தேர்தலை நடத்துவதென்று தீர்மானித்திருப்பதாக தகவல் தேர்தல் ஆணையம் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆளுங்கட்சியே, தேர்தலை விலைக்கு வாங்கும் வகையில் நடப்பது மிகத் தெளிவாகவும், திட்டவட்டமாகவும் தெரிகிறது. தேர்தல் ஆணையம் இதற்குப் பிறகு, இவ்விரு தொகுதிகளுக்கான தேர்தல் தேதியை அறிவித்து, அதையொட்டித் தான் இப்போது நிறுத்தப்பட்டுள்ள தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதித் தேர்தல்கள் நடக்குமென்று தெளிவாகத் தெரிகிறது.
 
அதற்கு திமுக சார்பில் நிச்சயமாக வேட்பாளர்கள் தஞ்சையிலும், அரவக்குறிச்சியிலும் நிறுத்தப்படுவார்கள் என்பதை நான் தெரிவித்துக் கொள்வதோடு, ஆளுங்கட்சியான அதிமுவின் அராஜகங்களையும், அதிகார துஷ்பிரயோகங் களையும், பணத்தை வாரி இறைத்து இந்த இரண்டு தொகுதிகளிலும் வாக்குகளை விலைக்கு வாங்கும் நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் நேரடியாகவே அறிந்து கொள்ள இப்படி ஒரு சந்தர்ப்பம் அவர்களுக்கும் வாய்த்திருப்பதை நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
 
எனவே, தொடர்ந்து இந்த இரு தொகுதிகளிலும் நடக்கின்ற தேர்தலை ஜனநாயக ரீதியிலும் நேர்மையான முறையிலும், நியாய வழியிலும் நடத்துவதற்கு இனியாவது தேர்தல் ஆணையம் முன் வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.