வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 25 ஏப்ரல் 2015 (18:30 IST)

நான் தொடங்கிய திட்டம் என்பதற்காக முடக்குவதா? கருணாநிதி காட்டம்

நான் ‪முதலமைச்சராக இருந்த போது, தொடங்கப்பட்ட திட்டம் என்பதற்காகவும், ஜெயலலிதா முதலமைச்சராக இல்லை என்பதாலும், மெட்ரோ ரெயில் திட்டத்தை முடக்குகிறார்கள் என காட்டமாக விமர்சித்துள்ளார்.
 
இது குறித்து தன முகநூலில் குறிப்பிட்டு எழுதியுள்ள திமுக தலைவர் மு.கருணாநிதி, “சென்னையில் "மெட்ரோ ரெயில்" சோதனை ஓட்டத்தை முதல் அமைச்சர் ஜெயலலிதாவே தொடங்கி வைத்தார். அனைத்து நாளேடுகளிலும் அதைப் பற்றி முதல் பக்கத்திலேயே பெரிதாக செய்திகள் வந்தன. 14,600 கோடி ரூபாய்க்கான திட்டம் அது. அந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

 
அதனைத் தொடங்கி வைக்கும் விழாவிலே பேசியிருந்தால், அந்தத் திட்டம் எந்த ஆட்சியில், எந்த ஆண்டு தொடங்கப்பட்டது என்பதைப் பற்றியெல்லாம் கூற வேண்டுமல்லவா? அதனால் அங்கே விழாப் பேருரை எதுவும் இல்லாமல் கொடி அசைத்து, மெட்ரோ ரெயிலின் சோதனையோட்டத்தைத் தொடங்கி வைத்து விட்டார்.
 
அந்தத் திட்டம் திமுக ஆட்சியில், நான் முதலமைச்சராக இருந்த போது, தொடங்கப்பட்ட திட்டம். எப்படி அதை வெளியிடுவார்கள்? இவ்வாறு சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற்ற போதிலும், அது ‪‬திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்பதற்காகவும், ஜெயலலிதா முதலமைச்சராக இல்லை என்பதாலும், மெட்ரோ ரெயில் திட்டத்தை பொது மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்து, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கக் கூட முன் வராமல் இருக்கிறார்கள்.
 
சேது சமுத்திரத் திட்டத்தையும், மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தையும் முடக்கி வைத்திருப்பதைப் போல, இந்த மெட்ரோ ரெயில் திட்டத்தின் விரிவாக்கத்தையும் முடக்கி வைத்தவர்கள், அதன் பிறகு மெட்ரோ ரெயில் திட்டத்தின் சோதனை ஓட்டத்தைத் தொடங்கி வைத்து, தாங்கள் தான் அந்தத் திட்டத்திற்கே காரணகர்த்தா என்பதைப் போல பெருமை தேடிக் கொள்ள முயன்றார்கள்.
 
ஆனால் தமிழ்நாட்டு மக்களுக்கு மெட்ரோ ரெயில் திட்டம் யாருடைய ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது என்ற உண்மை நன்றாகவே தெரியும்.