பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த - ஜெயலலிதா பற்றி கருணாநிதி கருத்து

பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த - ஜெயலலிதா பற்றி கருணாநிதி கருத்து


k.N.Vadivel| Last Updated: செவ்வாய், 12 ஏப்ரல் 2016 (04:31 IST)
பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த, முதல்வர்  ஜெயலலிதா என திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.
 
 
இது குறித்து, திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
முதல்வர் ஜெயலலிதா, கடந்த ஐந்தாண்டுகளாகத் தமிழக மக்கள் நலனை முற்றாகப் புறக்கணித்து, எல்லாப் பிரச்சினைகளிலும் ஆணவம் - அலட்சியம் காட்டி, எடுத்தேன் - கவிழ்த்தேன் என்று நடந்து, நிர்வாகத்தை நிர்மூலப்படுத்தி விட்டு, தற்போது அவருடைய தேர்தல் பிரச்சார முதல் கூட்டத்தில் அதிமுக ஆட்சியின் சாதனைகளைப் பற்றியெல்லாம் கேட்போர் வாய் பிளந்து கேட்கும் அளவுக்குப் பேசித் தனக்குத்தானே பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
 
முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களே! நீங்கள் சர்வ காலமும் சஞ்சாரம் செய்து கொண்டிருக்கும் வானத்திலிருந்து தயவுசெய்து சற்றுக் கீழே இறங்கி வாருங்கள்! நேரிடையாக நாட்டில் என்ன நடக்கிறது என்பதை நிதானமாகப் பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள்.
 
ஜெயலலிதா, சொன்னது எதையும் செய்வதற்காகச் சொல்வதில்லை என்பதைத் தமிழக மக்கள் தெரிந்தே வைத்திருக்கிறார்கள். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் முதலமைச்சர் ஜெயலலிதா, பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டுவதை விட்டு விட்டு, உண்மை ஏதாவது கைவசம் இருந்தால், அதைப்பற்றிப் பேசட்டும்.  இல்லாவிட்டால் “பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த, முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களே” என்றுதான் பாடத் தோன்றும் என தெரிவித்துள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :