1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 28 செப்டம்பர் 2016 (20:45 IST)

அதிமுக ஆட்சிக்கு வந்தாலே இப்படித்தான்! - கடுப்பாகும் கருணாநிதி

மாநிலத் தேர்தல் ஆணையத்தின் நடுநிலை தவறிய நடவடிக்கை - மாநில நிர்வாகத்தின் மறைமுக ஒத்துழைப்பு ஆகியவற்றுடன் அதிமுகவினர் தேர்தல் களத்தில் இருக்கிறார்கள் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
 

 
இது குறித்து கருணாநிதி உடன்பிறப்புகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ’’தமிழகத்தில் உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல் தேதிகள் கடைசியாக அறிவிக்கப்பட்டு விட்டன. அதாவது தேர்தல் தேதிகளை, மாநிலத் தேர்தல் ஆணையர், 25-9-2016 அன்றிரவு அறிவித்துள்ளார்.
 
வேட்பு மனு தாக்கல் எப்போது தெரியுமா? 26-9-2016 முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாமாம். அரசியல் கட்சிகள் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டாமா? தோழமைக் கட்சிகளையெல்லாம் அழைத்துப் பேச வேண்டாமா? எந்தெந்த கட்சிக்கு எத்தனை இடங்கள், எங்கெங்கே என்பது பற்றியெல்லாம் பேசுவதற்கு நேரம் அவகாசம் வேண்டாமா?
 
வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் அக்டோபர் 3. வேட்பு மனு திரும்பப் பெறுவது அக்டோபர் 6. அதற்கும் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும் நாளுக்கும் இடையே எத்தனை நாட்கள் தெரியுமா? 11 நாட்கள் மட்டுமே? இன்று வரும், நாளை வரும் என்று பல நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் தேதியை அறிவிக்க ஏன் இந்தத் தாமதம்? வேண்டுமென்றே மாநில தேர்தல் ஆணையம் செய்த தாமதம், எதற்கும் நேரம் தராமல் திடீரென்று அறிவித்து அனைத்து எதிர்க்கட்சிகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்க ஆளும் அதிமுகவுடன் சேர்ந்து திட்டமிட்டு செய்யப்பட்ட தாமதம்!
 
தற்போது, தேர்தல் அறிவிப்பு வெளிவந்த சில மணி நேரத்திலேயே அதிமுக தனது வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்திருக்கிறது. எனவே அதிமுக வேட்பாளர் பட்டியல்களையெல்லாம் தயார் செய்து வைத்துக் கொண்ட பிறகு, மற்ற எதிர்க்கட்சிகளுக் கெல்லாம் நேரம் கொடுக்காமல் தேர்தல் தேதி மாநிலத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டிருப்பதில் இருந்தே, அதிமுக அரசின் விருப்பத்திற்கு ஏற்ப, அதோடு இணைந்தேதான் மாநிலத் தேர்தல் ஆணையம் செயல்படுகிறதே தவிர, தன்னுடைய சுதந்திரமான சுயாட்சி நிலையை விட்டுக்கொடுத்து, நடுநிலை பிறழ்ந்து நடந்து கொள்கிறது என்பது தொடக்க அறிவிப்பிலேயே ஊர்ஜிதமாகி விட்டது; முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதற்குக் கட்டியம் கூறிவிட்டது.
 
தற்போது அதிமுக ஆட்சியில் திடீரென்று அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள் எப்படி நடைபெறப்போகின்றன என்பதற்கு முன்னோட்டமாக ஒரு செய்தி. புதுக்கோட்டை மாவட்ட பா.ஜ.க. இளைஞர் அணிக் கூட்டம் நடந்தது.
 
இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில இளைஞரணித் தலைவர் வினோஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வந்த உடனேயே அதிமுகவினர் மாநிலம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் பணப் பட்டுவாடா மற்றும் பிரியாணி அளிப்பதைத் தொடங்கிவிட்டனர். இதை மாநிலத் தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்திட, தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டும்" என்று பா.ஜ.க. இளைஞர் அணித் தலைவர் குற்றஞ்சாட்டியிருக்கிறார் என்றால், பணப் பட்டுவாடா - பிரியாணித் திருவிழாதான் அடுத்து வரும் நாட்களில் தமிழகத்தில் அதிமுகவினரால் அச்சம் நாணம் சிறிதுமின்றி நடத்தப்பட இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
 
அதிமுகவினரின் தேர்தல் கால அணுகுமுறை புதியதல்ல. எனவே, கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றியை உறுதி செய்யவும், ஜனநாயகத்தை வென்றெடுக்கவும், அறம் - ஆர்வம் ஆகியவை துணை கொண்டு, அயராமலும் எதற்கும் அஞ்சாமலும் பாடுபடுவாய் எனும் நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு” என்று தெரிவித்துள்ளார்.