செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 3 மே 2024 (17:25 IST)

காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து.! அனுமதிக்கப்பட்ட அளவைவிட 2 டன் வெடிபொருள் இருந்ததால் பரபரப்பு.!!

Bomb Blast
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து நடந்த இடத்தில் இருந்து அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்திருந்தது சோதனையில் தெரிய வந்துள்ளது.
 
விருதுநகர் மாவட்டம் ஆவியூர் அருகே உள்ள தனியார் கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக வெடிபொருள் செயலிழப்பு நிபுணர்கள் அங்கு எஞ்சியுள்ள வெடிபொருட்களை சேகரித்து வருகின்றனர்.‌ 
 
இந்நிலையில் இன்று மூன்றாவது நாளாக நடைபெற்ற பணியில், வெடிவிபத்தில் வெடித்து சிதறியது போக மீதம் இருந்த வெடி மருந்து பொருட்கள் முதற்கட்டமாக 2150 கிலோ கைப்பற்றப்பட்டு இரண்டு சரக்கு வாகனங்களில் காரியாபட்டி வட்டாட்சியர் மாரீஸ்வரன் மற்றும் அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் காயத்ரி தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் பந்தல்குடியில் உள்ள தனியார் வெடிமருந்து சேமிப்பு கிடங்கில் வைத்து பாதுகாக்க எடுத்து செல்லப்பட்டது.
 
வெடி விபத்து நடந்த இடத்தில் சிதறி கிடக்கும் வெடி மருந்து பொருட்களை சேகரிக்கும் பணி தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது.‌ வெடி மருந்து கிடங்கில் 1500 கிலோ மட்டுமே சேமித்து வைக்க அனுமதி உள்ள நிலையில்  அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன்னிற்கும் அதிமாக இருப்பு வைக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. 

 
மேலும் சிதறி கிடக்கும் வெடி மருந்து பொருட்களை முழுமையாக கைப்பற்றி அதை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்ற பின்னரே கல்குவாரியில் உள்ள வெடி மருந்துகளை வெடிக்க திட்டமிட்டுள்ளதாக வருவாய்த்துறை தகவல் தெரிவித்தனர்.