ரஜினி கட்சி ஆரம்பித்தால் முதலில் சேருவது இந்த காங்கிரஸ் எம்பி தான்: கராத்தே தியாகராஜன்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சியை ஆரம்பிக்க இருப்பதாக கடந்த 20 வருடங்களாக கூறிக் கொண்டு வந்த போதிலும், சமீபத்தில் அவர் கட்சி ஆரம்பிப்பதற்கான பணிகளை தொடங்கி கிட்டத்தட்ட அந்த பணிகளை முடித்து விட்டார் என்றும், வரும் ஏப்ரல் மாதம் அவர் கட்சியை தொடங்குவார் என்றும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
இந்த நிலையில் ரஜினி கட்சி ஆரம்பித்தாலும் திமுக தான் வெற்றி பெறும் என்றும், திமுக தலைவர் ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் என்றும் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவரும் திருச்சி நாடாளுமன்ற தொகுதி எம்பியுமான திருநாவுக்கரசு அவர்கள் கூறியிருந்தார்
ரஜினியின் நெருங்கிய நண்பரும் ரஜினியை முதல்வர் என்று சொல்லாமல் ஸ்டாலினை முதல்வர் என்று சொன்னது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட கராத்தே தியாகராஜன் ’ரஜினி கட்சி ஆரம்பித்தால் முதல் நபராக அவரது கட்சியில் சேர்வது திருநாவுக்கரசர் தான் என்றும் அவர் திமுக தலைவர் ஸ்டாலின் தான் முதல்வர் என்பதை வேண்டாவெறுப்பாக கூறி இருப்பார் என்றும், ஏற்கனவே அவர் தொலைபேசியில் ரஜினியிடம் இது குறித்து பேசி இருப்பார் என்றும் தெரிவித்தார்
ரஜினி கட்சி ஆரம்பித்தால் திமுக, அதிமுக உள்பட பல அரசியல் கட்சியில் இருந்து முக்கிய பிரமுகர்கள் விலகி அவரது கட்சியில் இணைவார்கள் என்று கூறப்படும் நிலையில் கராத்தே தியாகராஜனின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது