இனியாவது தவிர்க்க வேண்டும்: விமான சாகச நிகழ்ச்சி குறித்து கனிமொழி எம்பி..!
சென்னையில் நேற்று நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த நிலையில், இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி தனது சமூக வலைதளத்தில் "சமாளிக்க முடியாத கூட்டங்கள் கூடுவதை இனியாவது தவிர்க்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ராணுவ விமான சாகச நிகழ்ச்சியை காணவந்த பொதுமக்கள் கூட்ட நெரிசலால் அவதியுற்றதும், வெப்ப நிலையும் அதிகமாக இருந்த நிலையில் 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது. சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும்.
அதேபோல் சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் இது குறித்து கூறிய போது "வானத்தில் சாகசம், தரையில் சோகம்" என்று பதிவு செய்துள்ளார். மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் "கொளுத்தும் வெயிலில் சுமார் பத்து லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கூடும்போது, அங்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும். அதன் காரணமாக உடலில் நீர்ச்சத்துக் குறைந்து மயக்கம் ஏற்படும், சிலருக்கு மாரடைப்பு ஏற்படும். இது அறிவியல் எதார்த்தம். இதை எல்லாம் திட்டமிட்டு ஏற்பாடுகளை செய்த பிறகு, இந்த விழாவிற்கு அரசு பொது மக்களை அனுமதித்திருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
Edited by Mahendran