1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 18 ஜூன் 2024 (16:11 IST)

காஞ்சிபுரத்தில் பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு: கணவர் மேகநாதன் கைது

காஞ்சிபுரத்தில் பெண் காவலரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் பெண் காவலர் டில்லி ராணியின் கணவர் மேகநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரியில் இருந்து காஞ்சிபுரம் நீதிமன்றத்திற்கு சரணடைய வந்த மேகநாதனை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கடந்த 2011-ம் ஆண்டு டில்லிராணி என்பவர் காவல் துறை பணியில் சேர்ந்த நிலையில் இவருக்கும், மேகநாதன் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவர் விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் பணி செய்து வருகிறார்.
 
இந்த நிலையில் டில்லிராணி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களாக பிரிந்து வாழும் நிலையில் விவாகரத்து செய்வதற்கான நடவடிக்கையும் எடுத்து வருவதாக கூறப்பட்டது.
 
இந்த நிலையில் டில்லி ராணி நேற்று பணி முடித்துவிட்டு பெரியகாஞ்சிபுரம், சாலைத் தெரு சங்கர மடம் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென அவரது கணவர் மேகநாதன் அவரை வழிமடக்கி கத்தியால் வெட்டினார். இதில் டில்லிராணியின் இடது கையில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் இருந்தவர்கள் டில்லி ராணியை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் என்பதும், அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில்   மேகநாதனை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
Edited by Mahendran