1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 3 ஜூலை 2020 (11:47 IST)

காவலர்களின் அத்துமீறலுக்கு எதிரான போர் இது! – கமல்ஹாசன் அறிவிப்பு!

காவல்துறை மக்கள் மீது செய்யும் அத்துமீறல்களை விசாரிக்க நிலையான அமைப்பை வேண்டி மக்கள் நீதி மய்யம் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.

சாத்தான்குளம் கொலை சம்பவம் தேசிய அளவில் போலீசாரின் வன்முறை குறித்த மிகப்பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினரால் பாதிக்கப்பட்ட பலர் தங்களுக்கு தக்க நீதி வேண்டும் என நீதிமன்றங்களை நாட தொடங்கியுள்ளனர். சாத்தான்குளம் வழக்கை விசாரித்த ம்துரை உயர்நீதிமன்ற கிளை இனி சாத்தான்குளம் சம்பவம் போன்றவை எங்குமே நடைபெற கூடாது என கூறியுள்ளது.

இந்நிலையில் காவல்துறையினரால் பாதிக்கப்படும் மக்களின் வழக்குகளை உடனடியாக விசாரிக்க சரியான, நிலையான அமைப்பு வேண்டும் என்ற கருத்தை மக்கள் நீதி மய்யம் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ” சாமானியனை மரியாதையின்றி பேசுவது, தாக்குவது, பொய்வழக்கு போடுவது என காவல்துறையின் மீதான மக்களின் புகார்களை யார் விசாரிப்பது? சட்டரீதியாக இந்தப் போரை மக்கள் நீதி மய்யம் இன்று நீதி மன்றத்தில் தொடங்குகிறது. இத்தனை காலம் இதைச் செய்யாத ஆண்ட, ஆளும் கட்சிகளை மக்கள் அகற்றும் நேரம் இது.” என்று தெரிவித்துள்ளார்.