1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : சனி, 23 செப்டம்பர் 2017 (09:27 IST)

தீவிர மோடி எதிர்ப்பில் கமல்ஹாசன்?: அடுத்த சந்திப்பு மம்தா பானர்ஜியுடன்!

தீவிர மோடி எதிர்ப்பில் கமல்ஹாசன்?: அடுத்த சந்திப்பு மம்தா பானர்ஜியுடன்!

நடிகர் கமல் தனது அரசியல் பயணத்தை வேகமாக முன்னெடுத்து வருகிறார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் நடிகர் கமல் அரசியலுக்கு வர உள்ளார்.


 
 
தமிழக அரசின் மீதும், அமைச்சர்கள் மீதும் சரமாரியாக குற்றச்சாட்டுகளை வைத்த நடிகர் கமல் தீவிர ஊழல் எதிர்ப்பு நிலைப்பாட்டில் தற்போது உள்ளார். தொடர்ந்து அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளிலும், செய்தியாளர்கள் சந்திப்புகளிலும் அரசியல் பேச்சுக்கள் தெறிக்கின்றன.
 
கமலின் கருத்துக்களுக்கு ஆளும் அதிமுக மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதனோடு சேர்ந்து பாஜகவும் சேர்ந்து தான் எதிர்க்கின்றன. எச்.ராஜா, தமிழிசை உள்ளிட்டோர் கமலை எதிர்த்து வருகின்றனர். இதனால் கமல் தனது அரசியல் உறவுகளை இவர்களுக்கு எதிரானவர்களுடன் வளர்த்து வருகிறார்.
 
தொடக்கத்தில் திமுக நடத்திய முரசொலி பவள விழாவில் கலந்துகொண்ட கமல் எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்துக்கொண்டார். அதன் பின்னர் மோடி எதிர்ப்பு, பாஜக் எதிர்ப்பு முதல்வர்களில் ஒருவரான கேரள முதல்வர் பினராய் விஜயனை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தார் கமல். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல் அரசியல் குறித்து கற்றுக்கொள்ள வந்ததாக கூறினார்.
 
சில நாட்களுக்கு முன்னர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கமலை அவரது இல்லத்துக்கு வந்து சந்தித்து அரசியலுக்கு வர அழைப்பு விடுத்தார். அதன் பின்னர் செய்தியார்களிடம் பேசிய கெஜ்ரிவால் ஊழலுக்கும், மதவாதத்துக்கு எதிராக போராட கமல் அரசியலுக்கு வர வேண்டும் என்றார். கேஜ்ரிவால் ஆரம்பம் முதலே மோடியை எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் மக்களுக்காக தான் முதல்வராக விரும்புவதாகவும் தற்போது கமல் தனது நிலைப்பாட்டை கூறியுள்ளார். 100 நாட்களுக்குள் தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க தயார் என கூறிய கமல் அடுத்ததாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்க உள்ளார். மம்தா பானர்ஜி மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை தீவிரமாக அவரை எதிர்த்து வருகிறார்.
 
கமல்ஹாசன் தரப்பில் இருந்து மம்தாவை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளதாகவும், கமலின் தற்போதைய அரசியல் நடவடிக்கைகளை தெரிந்துகொண்ட மம்தா கமலை சந்திக்க நேரம் ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த சந்திப்பு விரைவில் இருக்கும் என தெரிகிறது. கமல்ஹாசன் அடுத்தடுத்து மோடிக்கு எதிராக உள்ள முதல்வர்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.