''களம் நமதாகட்டும்’' அமைச்சர் உதயநிதியை பாராட்டிய கமல்ஹாசன்
மக்கள் தங்கள் திறன்களை மேம்படுத்தி களம் காணும் வகையில் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளுக்குத் தமிழக அரசு ஏற்பாடு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடக்க விழா மற்றும் முதல்வர் இலச்சினை, சின்னம் வெளியீட்டு விழா சென்னை லீலா பேலஸில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், முதல்வர் முக.ஸ்டாலின், சென்னை கிங்ஸ் கேப்டன் தோனி, அமைச்சர்கள் உதய நிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை இலச்சினை மற்றும் இணையதளத்தை தோனி தொடங்கிவைத்தார்.
அதேபோல், எஸ். தமன் இசையில், அருண் ராஜா காமராஜ் பாடல் வரிகளில் தமிழக முதல்வர் டிராபி தீம் பாடலும் வெளியாகி வைரலானது.
இதுகுறித்து, இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடுகருமான கமல்ஹாசன் தன் டுவிட்டர் பக்கத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை - களம் நமதே! எனும் பெயரில் மக்கள் தங்கள் திறன்களை மேம்படுத்தி களம் காணும் வகையில் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளுக்குத் தமிழக அரசு ஏற்பாடு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர், அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். தமிழக மக்கள் இந்தப் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்று பயனடைய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். களம் நமதாகட்டும் என்று தெரிவித்துள்ளார்.