1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: சனி, 20 செப்டம்பர் 2014 (15:04 IST)

மலைக் கிராமப் பழங்குடியினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

கல்வராயன் மலைக் கிராமப் பழங்குடியினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த சிறப்புத் திட்டத்தை உருவாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
இது குறித்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-
 
“சேலம், விழுப்புரம் மாவட்டங்களின் எல்லையில் கல்வராயன் மலைகள் உள்ளன. இந்த மலைப் பகுதிகளில் உள்ள 100 க்கும் மேற்பட்ட கிராமங்களில், பழங்குடியினர் வாழ்ந்து வருகிறார்கள்.
 
இந்த மக்களுக்கு விவசாயத் தொழில் சரிவர இல்லை. வேலை வாய்ப்புகளும் செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் இளைஞர்கள் சிலர் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.
 
எனவே, இந்தப் பழங்குடியினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில், அவர்கள் வசிக்கும் மலைக் கிராமங்களில் சாலை, குடிநீர், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும், அங்கு பள்ளிகள், தொழிற்சாலைகள் போன்றவற்றை நிறுவுவதற்கும் சிறப்புத் திட்டம் ஒன்றை உருவாக்க, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடவேண்டும்“ என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்த மனு விசாரித்த நீதிபதிள், “இந்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். அப்போது, இந்த மலைக் கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் ஏதாவது செய்திருந்தால், அதன் வண்ணப் புகைப்படங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்.
 
மேலும், இந்த வழக்கு விசாரணை நவம்பர் 4 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.