234 தொகுதிகளிலும் ‘கலைஞர் நூலகம்’: துணை முதல்வர் உதயநிதி தகவல்
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் அடுத்த மூன்று மாதங்களில் கலைஞர் நூலகம் திறக்கப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக இளைஞரணி சார்பில் நடத்தப்பட்ட பேச்சு போட்டியில் கலந்து கொண்ட துணை முதலமைச்சர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். பள்ளி, கல்லூரி மாணவர்களிடமிருந்து தமிழ் பேச்சாளர்களை கண்டறிந்து தருமாறு முதல்வர் ஸ்டாலின் கூறியதாகவும், அதன்படி 17,000 பேர் இதில் பங்கேற்றதாகவும், 913 பேர் முதல் சுற்றிலும் 152 பேர் இரண்டாவது சுற்றிலும் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். பேச்சு போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் பேச்சாளர்களுக்கு முதல்வர் பரிசு வழங்கி பாராட்டியதாகவும் அவர் கூறினார்.
மேலும், தமிழகத்தின் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் கலைஞர் நூலகம் திறக்க வேண்டும் என்று முதல்வர் கூறியிருந்தார். இதுவரை 75 தொகுதிகளில் நூலகம் திறக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு நூலகத்திலும் நான்காயிரம் முதல் ஐந்தாயிரம் புத்தகங்கள் உள்ளதாகவும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் நூலகங்கள் பராமரிக்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
234 தொகுதிகளிலும் கலைஞர் நூலகம் அடுத்த மூன்று மாதங்களுக்குள் திறக்கப்படும் என்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்தார்.
Edited by Mahendran