வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 29 ஜூலை 2016 (19:11 IST)

‘வழக்குப் போடுங்கள்’ என்றதும் தலையாட்டும் தம்பிரான்கள் அரசு வழக்கறிஞர்கள் - கி,வீரமணி

‘அவதூறு வழக்குப் போடுங்கள்’ என்றவுடன், தலையாட்டும் தம்பிரான்களாக அரசு வழக்குரைஞர்கள் உடனே போடுவது எவ்வகையில் நியாயம்? என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 
இது குறித்து வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழ்நாடு அரசு பேச்சுரிமை ,கருத்துரிமை, எழுத்துரிமைக்கு எதிரான ஒருநிலைப்பாடு எடுத்துள்ளதோ என்று உச்சநீதிமன்றமும் சென்னை உயர்நீதிமன்றமும் நேற்றும், சில வாரங்களுக்கு முன்பும் அளித்துள்ள இரண்டு ஆணைகள் - தடை ஆணைகள் அதிமுக அரசுக்கு ஒருபோதும் பெருமை சேர்ப்பதாகாது.
 
உச்சநீதிமன்ற நீதிபதி, இம்மாதிரி இதுவரை மொத்தம் எத்தனை  வழக்குகள் போடப்பட்டுள்ளன என்ற பட்டியலை உடனடியாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசுக்காக வாதாடுகின்ற வழக்குரைஞர் சமர்ப்பிக்கவேண்டும்; விமர்சனங்களை எல்லாம் ஜனநாயகத்தில் அரசு பொறுத்துக்கொள்ள வேண்டுமே தவிர ,அதற்காக உடனே அவதூறு வழக்குகளை இப்படி அடுக்கடுக்காக அனைத்துத் தரப்பினர் மீதும் போடலாமா? என்று கடுமையாகக் கேட்டுள்ளது உச்சநீதிமன்றம்.
 
எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், மேடையில் பேசப்படும் பேச்சுகள் - அதுவும் எப்போதோ பேசப்பட்டவைகளைக்கூட தூசி தட்டி எடுத்து வழக்கு போடுவது தேவைதானா? அரசு இயந்திரம் நம்மிடம் உள்ளது என்ற ஒரே காரணத்திற்காக சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் அச்சுறுத்துவது எவ்வகையிலும் நியாயமாகாது!
 
ஜனநாயகம் என்பது மக்களாட்சி - அதில் கருத்துச் சுதந்திரம் - பேச்சு - எழுத்துச் சுதந்திரம் என்பவை பறிக்கப்படக் கூடாத - பறிக்கப்பட முடியாத அடிப்படை உரிமைகளாகும்!
 
இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள மாற்றப்பட முடியாத - அடிப்படைக் கட்டமைப்புப் பகுதியில் (Basic Structure of the Constituion) தான் அடிப்படை உரிமைகளான (Fundamental Rights)  எழுத்துரிமை, பேச்சுரிமை போன்ற உரிமைகள் உண்டு என்பது ஆட்சியாளருக்குத் தெரியாதா?
 
‘இம்‘ என்றால் அவதூறு வழக்கு - ‘ஏன்’ என்றால் சிறைவாசம்; மதுவிலக்கு தேவை என்பதற்காகப் பாட்டு பாடிய பாடகர் கோவன்மீது வழக்குப் போட்டது - இறுதி முடிவு என்ன? இப்படி அடுக்கடுக்காக சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் கண்டனங்கள் (Stricture) ஆட்சியாளர்மீது பாய்வது முதலமைச்சருக்குத் தெரியாதா?
 
‘அவதூறு வழக்குப் போடுங்கள்’ என்றவுடன், தலையாட்டும் தம்பிரான்களாக அரசு வழக்குரைஞர்கள் உடனே போடுவது எவ்வகையில் நியாயம்? மாநில அரசுக்கு அவமானம் அல்லவா?
 
அதுபோலவே தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினருக்கு- அதுவும் பலம்வாய்ந்த தன்மையில் உள்ள எதிர்க்கட்சியினருக்கு -பேசுவதற்குரிய சரியானவாய்ப்பை அளித்தால், அவர்கள் எழுப்பும் கேள்விகளை, உரியமுறையில், ஆதாரங்களோடுமறுத்தால் அதுதான் ஆரோக்கியமான ஜனநாயக நடைமுறையாக இருக்க முடியும்!  ஆனால், பலராலும் எடுத்து வைக்கப்படும் விமர்சனம் என்ன? பல ஊடக விவாதங்களிலும் கூறப்படுவதுண்டு.
 
எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்குப் பேசிட போதிய வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை; தப்பித் தவறி அளித்தாலும், தனிப்பட்ட விமர்சனங்களை ஆளுங்கட்சி அள்ளி வீசுதல், பதில் சொன்ன கருத்துகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்குதல் என்றால், அது ஜனநாயகத்தின் மூச்சுத் திணறல் ஆகாதா?
 
இந்தப் போக்கு - சட்டமன்றம்; ஆட்சி மன்றம் - இவைகளின் போக்கில் அணுகுமுறை மாற வேண்டும்; உச்சநீதிமன்றம் இதற்குமுன் அளித்த தீர்ப்பையும் கவனித்துக் கொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.