டாஸ்மாக் முறைகேடு வழக்கு; ஐகோர்ட் நீதிபதிகள் திடீர் விலகல்! பரபரப்பு தகவல்..!
அமலாக்கத் துறையின் நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் தொடர்ந்த வழக்கில் இருந்து விலகுவதாக நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் மற்றும் நீதிபதி என்.செந்தில்குமார் அமர்வு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் தலைமையகத்தில் கடந்த மாதம் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதன் பின்னர், இந்நிறுவனத்தில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான முறைகேடு நடைபெற்றதாக அமலாக்கத் துறை அறிக்கை வெளியிட்டது.
இந்த சோதனை, இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் கூட்டாட்சி முறைக்கு முரணானது என்பதால், டாஸ்மாக் உயர் அதிகாரிகள் மற்றும் தமிழக அரசு உள்துறை செயலர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். விசாரணையின் பெயரில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை அமலாக்கத்துறை துன்புறுத்தக் கூடாது என்றும் அந்த மனுவில் கோரப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் மற்றும் நீதிபதி என்.செந்தில்குமார் அமர்வு விசாரணை செய்தது. அதில், வரும் 25ம் தேதி வரை எந்தவிதமான மேலதிக நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது என அமலாக்கத் துறைக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், அதிகாரங்களை தவறாக பயன்படுத்திய விதத்திற்காக அமலாக்கத் துறையை நீதிபதிகள் கடுமையாக கண்டித்தனர்.
இந்நிலையில், இன்று திடீரென இந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Mahendran