வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 22 செப்டம்பர் 2016 (14:35 IST)

பிரேத பரிசோதனை வழக்கு ; இன்று மாலை தீர்ப்பு : நிறைவேறுமா ராம்குமார் தரப்பு கோரிக்கை?

பிரேத பரிசோதனை வழக்கு ; இன்று மாலை தீர்ப்பு : நிறைவேறுமா ராம்குமார் தரப்பு கோரிக்கை?

சிறையில் மரணம் அடைந்த ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்வது தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று மாலை 5 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


 

 
சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் மரணம் அடைந்த ராம்குமாரின் உடல் தற்போது சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.   
 
அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதால், பிரேத பரிசோதனை செய்யப்படும் போது, அரசு மருத்துவர்களோடு,  தங்கள் சார்பில் ஒரு தனியார்  மருத்துவரையும் அனுமதிக்க வேண்டும் என்று ராம்குமாரின் தந்தை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  
 
இரு நாட்களுக்கு முன்பு அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, தனியார் மருத்துவரை அனுமதிப்பது குறித்து இரு நீதிபதிகளிடையே கருத்து வேறுபாடு எழுந்ததால், இந்த வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரிப்பார் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.  
 
அதன்படி, அந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் சங்கரசுப்புவிற்கும், அரசு தரப்பு வழக்கறிஞருக்கும் இடையே அனல் பறக்கும் விவாதங்கள் எழுந்ததாக தெரிகிறது.
 
இந்நிலையில், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருபாகரன், தீர்ப்பை இன்று மாலை 5 மணிக்கு ஒத்தி வைத்துள்ளார். ராம்குமார் தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானால், அவரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் குழுவில், ராம்குமார தரப்பு தனியார் மருத்துவர் ஒருவரும் இடம் பெறுவார்.
 
அப்போது ராம்குமார் உடம்பில் உள்ள காயங்களின் அடிப்படையில் பல உண்மைகள் வெளியே வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.