1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Modified: செவ்வாய், 22 ஜூலை 2014 (13:34 IST)

ரூ.3 ஆயிரம் கோடி நிதியுதவி தாருங்கள் - உலக வங்கித் தலைவரிடம் ஜெயலலிதா கோரிக்கை

தமிழகத்தில் இரண்டாவது சாலை மேம்பாட்டு திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக உலக வங்கி அளிக்கும் நிதி உதவியை ரூ.1,800 கோடியில் (300 மில்லியன் அமெரிக்க டாலர்) இருந்து ரூ.3,000 கோடியாக (500 மில்லியன் அமெரிக்க டாலர்) அதிகரித்து தர வேண்டும் என, முதல்வர் ஜெயலலிதா உலக வங்கித் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை உலக வங்கி தலைவர் ஜிம் யாங் கிம் (Dr. Jim Yong Kim), 2014 ஜூலை 21 திங்கட்கிழமை அன்று தலைமை செயலகத்தில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:
 
இந்தியாவில் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில், அதிகப்படியான திட்டங்கள் செயல்படுத்தும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகத் திகழ்கிறது. சர்வதேச முதலீட்டாளர்களின் விருப்பமான மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. உலக வங்கியிடம் இருந்து குறைந்த கடனில் நிதியுதவிகளைப் பெறுவதோடு, தொழில்நுட்ப உதவிகளையும் தமிழகம் பெற்று வருகிறது.
 
ஒருங்கிணைந்த சத்துணவுத் திட்டம் (Tamil Nadu Integrated Nutrition Project), தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி திட்டம்-1 மற்றும் 2 (Tamil Nadu Urban Development Project-I and II), தமிழ்நாடு சாலை துறை திட்டம்-1 (Tamil Nadu Road Sector Project-I), தமிழ்நாடு சுகாதார திட்டம் (Tamil Nadu Health Systems Project) ஆகிய திட்டங்கள் உலக வங்கியின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உலக வங்கி முக்கியப் பங்காற்றி வருகிறது.
 
அணை மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம், தமிழ் நாடு கடலோரப் பேரழிவுத் தடுப்புத் திட்டம் ஆகியவற்றுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. குறித்த காலத்தில் அவை நிறைவேற்றப்படும்.
 
தமிழகத்தில் இரண்டாவது சாலை மேம்பாட்டு திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான பூர்வாங்க பணிகள் நிறைவடைந்து, விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளன. பொதுமக்கள் மற்றும் தனியார் பங்களிப்புடன் இத்திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இத்திட்டத்துக்கு உலக வங்கி ரூ.1,800 கோடி மட்டுமே நிதியுதவி வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. இந்த நிதியை ரூ. 3,000 கோடியாக அதிகரித்து வழங்க வேண்டும்.
 
இதேபோல், தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் புதுவாழ்வு (IAMWARM and PUDHUVAZHVU) உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களுக்கும் உலக வங்கி தனது ஆதரவைத் தொடர்ந்து அளிக்க வேண்டும். இந்தப் புதுவாழ்வு திட்டம், இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளது. சமூகப் பொறுப்புக்கான விருதுடன், 4174 கிராமப் பஞ்சாயத்துகளில் டாலி கணக்கியல் முறையை அறிமுகப்படுத்தியதற்காக. 2013ஆம் ஆண்டுக்கான சிறந்த மின்னாளுகைக்கான வெள்ளி விருதையும் இந்தத் திட்டம் பெற்றது. இந்தத் திட்டத்தின் செயல்பாடு குறித்து நேரில் ஆய்வு செய்யுங்கள். 
 
கடந்த அதிமுக ஆட்சியில் உலக வங்கியின் கிளை சென்னையில் தொடங்கப்பட்டது. இந்த வங்கியின் கிளைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு அளிக்கும். இதன் மூலம், வங்கியின் கிளை மிகப் பெரிய வளர்ச்சி அடையும்.
 
இவ்வாறு முதல்வர் கூறினார்.
 
இந்தச் சந்திப்பின் போது, உலக வங்கித் தலைவர் பேசும்போது, ``பொதுச் சேவையில் தமிழக அரசு மகத்தான சேவை ஆற்றி வருகிறது. அனைத்துத் துறைகளிலும் சீரான வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக, குழந்தை இறப்பு விகிதம் மற்றும் மகப்பேறு கால இறப்பு விகிதம் ஆகியவை குறைந்துள்ளன. தமிழக அரசு செயல்படுத்தி வரும் அனைத்துத் திட்டங்களும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், கிராமப்புறத்தில் வறுமையை ஒழிப்பதற்காகத் தமிழக அரசு இலவச கறவை மாடுகள், ஆடுகளை வழங்கியுள்ளது. இதன் மூலம், சமூகத்தில் அனைத்துத் தரப்பினரும் சமமாக வாழ வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அமைதி நிலவுவதோடு, திறமையான தொழிலாளர்களும் இருப்பதால், முதலீட்டாளர்களின் விருப்பமான மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது’’ என்றார்.
 
முன்னதாக, நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்து உலக வங்கி தலைவர் கவலை தெரிவித்தார். அதற்குப் பதிலளித்த முதல்வர், தமிழகத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் தொட்டில் குழந்தை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கினார்.
 
உலக வங்கியின் இந்தியாவுக்கான இயக்குநர் ஒன்னோ ரகுல் (Onno Ruhl), தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் உலக வங்கியின் திட்டங்கள் குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இந்தத் திட்டங்களின் தொடர்ச்சியாக முன்மொழியப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து, 12 மாத காலத்துக்குள் முடிவுகள் எடுக்கப்படும். முதல்வரின் கூடுதல் நிதியுதவி குறித்த கோரிக்கை பரிசீலிக்கப்படும். எனத் தெரிவித்தார்.
 
இந்தச் சந்திப்பின் போது, உலக வங்கியின் இயக்குநர்கள் செர்ஜி தேவியக்ஸ், டாக்டர் சோமநாதன், சுனில்குமார் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
 
இதனைத் தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.