ஜெ. கைரேகை செல்லாது: களத்தில் குதிக்கும் திமுக
ஜெ. கைரேகை செல்லாது: களத்தில் குதிக்கும் திமுக
தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அவருடைய கட்சி வேட்பாளர்களின் தேர்தல் சின்னம் ஒதுக்கும் படிவத்தில் ஜெயலலிதா கைரேகை வைத்திருந்தார். இந்த விவகாரத்தை திமுக தற்போது கையிலெடுத்துள்ளது.
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் தாக்கல் செய்த படிவம் ஏ மற்றும் பி-யில் ஜெயலலிதாவின் கையெழுத்துக்கு பதிலாக கைரேகை இடம்பெற்றிருந்தது.
இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. ஜெயலலிதாவுக்கு பிஸியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் கையெழுத்து மாறிவிடக்கூடாது என்பதால் அவரது கைரேகை வைக்கப்பட்டுள்ளது எனவும், தேர்தல் ஆணையம் இதற்கு அனுமதி வழங்கியது எனவும் அதிமுக தரப்பில் விளக்கம் கூறப்பட்டது.
ஆனால் இந்த மூன்று தொகுதிகளிலும் அதிமுக, திமுக இடையே நேரடி போட்டி நிலவுவதால் இதில் உள்ள சட்டசிக்கலை தேர்தல் அதிகாரியிடம் கூறி முறையிட திமுக முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
1968-ஆம் ஆண்டு தேர்தல் ஆணையச் சட்டத்திற்கு முரணாக இந்த கைரேகை உள்ளதாக இன்று மூன்று தொகுதிகளிலும் திமுக வழக்கறிஞர்கள் தேர்தல் அதிகாரியைச் சந்தித்து ஜெயலலிதாவின் கைரேகை பதியப்பட்ட படிவங்கள் சட்ட பூர்மானவை அல்ல, சட்ட ரீதியாக அவைகளை ஏற்க முடியாது அவற்றை நிராகரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.