திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Modified: வியாழன், 7 ஆகஸ்ட் 2014 (15:58 IST)

ஆகஸ்டு 15ஆம் தேதி, மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள், சுமார் 12 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக, சுதந்திர தினமான 15.8.2014 அன்று முதல் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் எனத் தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாகத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110இன் கீழ், 2014 ஆகஸ்டு 7ஆம் தேதி அவர் அறிவித்ததாவது:
 
உணவினை அளித்து, நல் வளங்களை வழங்கி, விவசாயிகளின் விடிவெள்ளியாகத் திகழும் காவிரி நீர், மேட்டூர் அணையிலிருந்து காவேரி டெல்டா பாசனத்திற்கு, நீர் இருப்பினைப் பொறுத்து, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்திலோ அல்லது அதற்குப் பின்னரோ திறந்து விடப்படும். 
 
இந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி அன்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் 44.40 அடியாக இருந்ததாலும், தென் மேற்குப் பருவமழை 5.6.2014 அன்று கர்நாடகா – கேரளா நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் துவங்கி பின்னர் குறைவடைந்ததாலும், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவாக இருந்ததாலும், மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12 அன்று தண்ணீர் திறந்துவிட இயலவில்லை. 
 
தற்போது கர்நாடகா - கேரளா மாநிலங்களில், காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில், தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்து, தொடர் மழை பெய்து வருவதால், கர்நாடகத்தில் உள்ள முக்கிய அணைகளான ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி ஆகியன முழுக் கொள்ளளவை எட்டி வருகின்றன. கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளிலிருந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்படுவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து 6.8.2014 மாலை நிலவரப்படி 93.24 அடியாக, அதாவது 56.432 டி.எம்.சி. அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மேட்டூர் அணைக்குக் கணிசமான நீர் வந்து கொண்டிருக்கிறது. 
 
காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதியில் தென்மேற்குப் பருவ மழை மேலும் நன்றாக இருக்கும் என்பதை எதிர்நோக்கியும், தற்போது மேட்டூர் அணையில் உள்ள நீர் இருப்பைக் கருத்திற் கொண்டும், இந்த வருடம் வடகிழக்குப் பருவ மழை இயல்பானதாக இருக்கும் என்பதைக் கருத்திற் கொண்டும், சுமார் 12 லட்சம் ஏக்கர் பரப்பளவில் காவேரி டெல்டா மாவட்ட விவசாயிகள் சம்பா சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக, 15.8.2014 முதல் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
இதன் மூலம், மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் வீணாகாமல், காவிரி, வெண்ணாறு மற்றும் கல்லணை கால்வாய் பாசனப் பகுதிகளில் உள்ள கிளை ஆறுகள் மற்றும் வாய்க்கால்கள் ஆகியவற்றிற்கு நீரைப் பகிர்ந்து அளிக்கவும், ஏரிகளில் நீரைச் சேமிக்கவும் வழிவகை ஏற்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.