1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : வியாழன், 23 பிப்ரவரி 2017 (12:40 IST)

வேண்டாம் என ஜெயலலிதா தான் கூறினார்: நீதிமன்றத்தில் அப்பல்லோ பதில் மனு!

வேண்டாம் என ஜெயலலிதா தான் கூறினார்: நீதிமன்றத்தில் அப்பல்லோ பதில்மனு!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இறந்தார். அவர் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து இறக்கும் வரை அவரது புகைப்படத்தை வெளியிடாதது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.


 
 
இந்நிலையில் அதிமுக உறுப்பினர் ஜோசப் என்பவர் கடந்த ஜனவரி மாதம் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார் அதில், கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து தேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை மூலம் கூறி வந்தது.
 
ஆனால் திடீரென டிசம்பர் 4-ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு டிசம்பர் 5-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்துவிட்டதாகக் கூறுவது உண்மைக்குப் புறம்பானது என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
 
இது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதுடன் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட போது அவருடைய கால்கள் அகற்றப்பட்டும், அவரது உடல் பதப்படுத்தப்பட்டும் இருந்ததாக கூறப்படுகிறது.
 
டிசம்பர் 5-ஆம் தேதி இரவு இறந்த ஜெயலலிதா உடல் மறுநாளே அடக்கம் செய்யப்படுகிறது எனும்போது, எதற்காக அவரது உடலை பதப்படுத்த வேண்டும் என்றும், இறப்பதை அறிவிக்கும் முன்பாக முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் ஏன் பதவியேற்க வேண்டும் என்றும் கேள்விகள் வருகின்றன.
 
எனவே, இதுபோன்ற சந்தேகத்துக்குரிய பல்வேறு நிகழ்வுகள் இருப்பதால், நேதாஜி மரணம் தொடர்பாக விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட்டது போல, ஜெயலலிதா மரணத்தில் உள்ள உண்மைகளை வெளிப்படுத்தவும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய விசாரணைக் குழுவை நியமிக்க வேண்டும் என அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்தார்.
 
இதனை விசாரித்த நீதிமன்றம் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தை இது தொடர்பாக அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஆனால் அவர்கள் இன்று அறிக்கை தாக்கல் செய்யாமல் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அந்த பதில் மனுவில் ஜெயலலிதா தனது புகைப்படத்தை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டதாக கூறியுள்ளனர்.
 
தனது நிலையை பார்த்தால் தொண்டர்கள் சோகமடைவார்கள் அதனால் புகைப்படத்தை வெளியிட வேண்டாம் என ஜெயலலிதா கேட்டுக்கொண்டார். எம்சிஐ விதிகளின் படி நோயாளியின் சிகிச்சை தொடர்பான விபரத்தை வெளியிடவில்லை. நீதிமன்றத்துக்கு ஜெயலலிதாவின் சிகிச்சை விபரம் வேண்டுமென்றால் தர தயார்.
 
ஜெயலலிதா மரணம் தொடர்பான இந்த வழக்கில் தமிழக அரசும் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவும், அப்பல்லோ தாக்கல் செய்த பதில் மனுவும் ஒரே மாதிரியாக இருப்பதாக மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார். இதனையடுத்து இந்த வழக்கு மார்ச் 13-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.