1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 7 டிசம்பர் 2016 (15:50 IST)

போயஸ் கார்டன் வீட்டை நினைவு சின்னமாக்க கோரிக்கை

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் யாரும் இல்லை என்பதால், அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை நினைவு சின்னமாக மாற்ற வேண்டும் என்று இணையதளத்தில் கோரிக்கை எழுந்துள்ளது.


 

 
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் யாரும் இல்லாத காரணத்தினால், அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் வீடு சசிகலாவுக்கு சொந்தமாக போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும் என சேஞ்.காம் என்ற இணையதளத்தில் கோரிக்கை மனு வெளியாகியுள்ளது.
 
கே.சண்முகம் என்பவர் இந்த கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
 
மதிப்பிற்குரிய ஜெ.ஜெயலலிதா அவர்கள் தனது தொண்டர்களாலும் தமிழக மக்களாலும் அம்மா என்று அழைக்கப்படுபவர். தமிழக வரலாற்றில் மறுக்க முடியாத ஒரு தலைவர். ஆறு முறை தமிழகத்தின் முதல்வராக இருந்து முதல்வராகவே மறைந்தவர். 
 
அவருக்கென்று நேரடி வாரிசு என்று யாரும் இல்லை. இப்போது அவருடைய போயஸ் கார்டன் இல்லம் தனியார் ஒருவருக்கு சொந்தமாகக் கூடும் என்று செய்திகள் வெளிவருகின்றன. 
 
எனவே திரு.ஜெயலலிதா அவர்களின் போயஸ் கார்டன் இல்லத்தை ஒரு நினைவுச் சின்னமாக அறிவித்து காலத்திற்கும் அவருடைய தொண்டர்கள், பொதுமக்கள் வந்து பார்த்துச் செல்லும் இடமாக அரசு பராமரிக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
அதன்படி இது கையெழுத்திடும் மனுவாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவு அளிப்பவர்கள் அதில் அவர்களது பெயர் உள்ளிட்ட சில விவரங்களை பதிவு செய்ய வேண்டும். தற்போது வரை இந்த இணையதளத்தில் சுமார் 2500 பேர் ஆதரவு அளித்துள்ளனர்.