1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: திங்கள், 5 அக்டோபர் 2015 (02:42 IST)

சிங்காரவேலர் - ஜீவரத்தினம் மணிமண்டபத்தை ஜெயலலிதா திறந்து வைத்தார்.

சென்னையில் சிங்காரவேலர் மணிமண்டபம் மற்றும் ஜீவரத்தினம் மணி மண்டபங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
 

 
இது குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
 
நாட்டிற்காக பெரும் தொண்டாற்றி பல்வேறு தியாகங்களைச் செய்த தலைவர்கள் மற்றும் சான்றோர்களை சிறப்பிக்கும் வகையிலும், அவர்களின் தியாகங்களை வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையிலும், நினைவிடங்கள், நினைவு இல்லங்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் மணிமண்டபங்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு உருவாக்கி பராமரித்து வருகிறது.
 
அந்த வகையில், சென்னை, மயிலாப்பூர் மீனவர் பகுதியில் பிறந்து, வழக்குரைஞராக திகழ்ந்து, அண்ணல் காந்தியடிகள் ஒத்துழையாமை போராட்டத்தை தொடங்கிய போது வழக்குரைஞர் அங்கியை தீயிட்டு கொளுத்திவிட்டு தீவிரமான விடுதலைப் போராட்ட வீரராக மாறி, முதன் முதலாக மே தின நாளை விவசாயிகள், தொழிலாளிகள் மற்றும் மீனவர்கள் சார்பில் கொண்டாடி, சிந்தனையாலும் செயலாலும் அல்லும் பகலும் ஏழைத் தொழிலாளி வர்க்கத்திற்காகப் பாடுபட்ட ஓய்வறியா தொண்டர் சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலர் மற்றும் திராவிட இயக்கத்தின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராகவும், மீனவர் இனத்தின் தலைவராகவும், மீனவ மக்களின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக விளங்கியவரும், அண்ணாவின் அன்பையும், எம்.ஜி.ஆரின் நம்பிக்கையையும் பெற்ற, சாதி, மத வேறுபாடுகளை ஒழிப்பதில் முதன்மையாக திகழ்ந்தவருமான சுயமரியாதைச் சுடரொளி என்.ஜீவரத்தினம் ஆகியோரது நினைவைப் போற்றும் வகையில், சென்னை, இராயபுரத்தில் 2 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலர் மணிமண்டபம், சுயமரியாதைச் சுடரொளி என்.ஜீவரத்தினம் மணிமண்டபம் மற்றும் நூலகம் ஆகியவற்றை காணொலிக் காட்சி தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா வீடியோகான்பரன்சிங் மூலமாகத் திறந்து வைத்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.