வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Modified: திங்கள், 11 ஆகஸ்ட் 2014 (18:32 IST)

காமன்வெல்த்: பதக்கம் வென்றவர்களுக்கு ஜெயலலிதா உயரிய ஊக்கத் தொகை

ஸ்காட்லாந்து நாட்டின், கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 20ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த எஸ். சதீஷ்குமார், செல்வி ஜோஷ்னா சின்னப்பா மற்றும் செல்வி தீபிகா பல்லிகல் ஆகியோருக்கு தலா 50 லட்சம் ரூபாய்க்கான உயரிய ஊக்கத் தொகையையும் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்ற அச்சந்தா ஷரத் கமல், அந்தோணி அமல்ராஜ், ரூபிந்தர் பால் சிங், ஸ்ரீஜேஷ் பரட்டு ரவீந்திரன் ஆகியோருக்கு தலா 30 லட்சம் ரூபாய்க்கான உயரிய ஊக்கத் தொகையையும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று (11.8.2014) தலைமைச் செயலகத்தில் வழங்கிப் பாராட்டினார். 

 
விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாகத் தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி வாகை சூட ஏதுவாக, தமிழகத்தைச் சேர்ந்த திறமை மிக்க விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு உயரிய பயிற்சி அளித்தல், உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு மையங்கள் அமைத்தல், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விளையாட்டு விடுதிகளைக் கட்டுதல், சிறந்த விளையாட்டு வீரர்கள் மேலும் பல சாதனைகள் புரிய உதவித் தொகை வழங்குதல், போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றி பெறும் வீரர்களுக்கு உயரிய ஊக்கத் தொகை வழங்குதல் போன்ற பல்வேறு சிறப்பான திட்டங்களை ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. 
 
பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு அரசு சார்பில் உயரிய ஊக்கத் தொகை வழங்கிட ஜெயலலிதா, 19.12.2011 அன்று ஆணையிட்டிருந்தார். இதன்படி, ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கான ஊக்கத் தொகை 20 லட்சம் ரூபாயிலிருந்து 50 லட்சம் ரூபாயாகவும்; வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு 15 லட்சம் ரூபாயிலிருந்து 30 லட்சம் ரூபாயாகவும்; வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 
 
ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் 23.7.2014 முதல் 3.8.2014 வரை நடைபெற்ற 20ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், பளுதூக்குதல் போட்டியில் 77 கிலோ உடல் எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றதோடு, புதிய சாதனையும் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த எஸ். சதீஷ்குமார்; ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த செல்வி ஜோஷ்னா சின்னப்பா மற்றும் செல்வி தீபிகா பல்லிகல் ஆகிய மூன்று வீரர் மற்றும் வீராங்கனைகளுக்குத் தலா 50 லட்சம் ரூபாய்க்கான உயரிய ஊக்கத் தொகை; மேசைப்பந்து (Table Tennis) ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த அச்சந்தா ஷரத் கமல் மற்றும் அந்தோணி அமல்ராஜ்; ஆடவர் ஹாக்கி போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த ரூபிந்தர் பால் சிங் மற்றும் ஸ்ரீஜேஷ் பரட்டு ரவீந்திரன் ஆகிய நான்கு வீரர்களுக்கு தலா 30 லட்சம் ரூபாய்க்கான உயரிய ஊக்கத் தொகை; 
 
என மொத்தம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய்க்கான உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலைகளை 7 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கிப் பாராட்டினார். 
 
ஜெயலலிதாவிடமிருந்து ஊக்கத் தொகையினைப் பெற்றுக் கொண்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், தங்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் உயரிய ஊக்கத் தொகை வழங்கிப் பாராட்டியமைக்காக முதலமைச்சருக்குத் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 
 
அப்போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள், “Congratulations. நாங்கள் உங்கள் வெற்றியைக் கண்டு பெருமைப்படுகிறோம். இன்னும் நிறைய வெற்றியை நீங்கள் அடையவேண்டும் என வாழ்த்துகிறேன்.  I wish you many more victories in the future” என ஒவ்வொரு வீரர் வீராங்கனைகளையும் வாழ்த்தியதோடு மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் “Once again I offer my congratulations to all of you. You have brought glory and pride for the State of Tamilnadu and for the country and I wish you all greater and greater success”  என்று தெரிவித்தார்கள். 
 
இந்த நிகழ்ச்சியில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். சுந்தரராஜ், தமிழ்நாடு அரசு ஆலோசகர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், இ.ஆ.ப., (ஓய்வு), இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் முகமது நசீமுத்தின், இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முதன்மைச் செயலாளர் / உறுப்பினர் செயலாளர் வி.கு. ஜெயக்கொடி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
 
இதனைத் தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.