1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : திங்கள், 27 ஏப்ரல் 2015 (11:36 IST)

பவானி சிங்கின் நியமனம் செல்லாது: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானி சிங் நியமனமனம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


 

 

 
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கிலும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில், அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜரானார். அவரது நியமனத்தை எதிர்த்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
 
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மதன் பி.லோகுர் மற்றும் ஆர்.பானுமதி ஆகியோர் முரண்பட்ட தீர்ப்பு வழங்கியதால், மனு மீதான விசாரணை 3 நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பிரபுல்ல சி.பந்த் ஆகியோரைக் கொண்ட அமர்வுக்கு முன்னர் இந்த விசாரணை நடைபெற்றது. 
 
அன்பழகன் தரப்பில் மூத்த வக்கீல் அந்தியார்ஜூனா தன்னுடைய இறுதி வாதத்தில், மேல்முறையீட்டு மனுவின் மீது கர்நாடக உயர் நீதிமன்றத்தில், பவானிசிங் வாதாடுவதற்கு எந்தவகையான சட்டரீதியான உறவும் கிடையாது என்றும், அவர் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக செயல்பட்டார் என்றும் கூறினார்.
 
ஜெயலலிதா சார்பில் வாதாடிய மூத்த வக்கீல் பாலி நாரிமன் தன்னுடைய இறுதி வாதத்தின் போது, அரசு வக்கீல் நியமனம் என்பது குறிப்பிட்ட வழக்கு தொடர்பானது என்றும், பவானிசிங் நியமனத்தில் விதிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.
 
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள்,  பவானி சிங் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், பவானி சிங் நியமனம் செல்லாது என்று அறிவித்தனர். மேலும், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற கருத்தை முன் வைத்தனர். 
 
மேல்முறையீட்டு வழக்கில் அன்பழகன் எழுத்துமூலம் அளிக்கும் வாதத்தை பெற்றுக் கொண்டு தீர்ப்பளிக்கவும் கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு அனுமதி அளித்திருந்தனர். மேலும், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி, சிறப்பு நீதிமன்றம்  வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலும், வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சியங்கள் மற்றும் ஆவணங்கள் அடிப்படையிலும் மேல்முறையீட்டு மனுவை விசாரித்து தீர்ப்பு வழங்க எவ்விதமான தடையும் இல்லை என்று தெரிவித்தனர். 
 
இத்தைகைய பரபரப்பான சூழ்நிலையில், பவானி சிங் நியமனம் குறித்த இறுதி தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பிரபுல்ல பந்த் அடங்கிய அமர்வு இன்று காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு வந்தது.
 
மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு, அளித்துள்ள தீர்ப்பில், மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்குரைஞராக பவானி சிங்கை நியமிக்க தமிழக அரசுக்கு உரிமை இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.
 
அத்துடன், பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையை மறு விசாரணை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் நீதிபதிகள் அந்தத் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
 
மேலும்,  அன்பழகன் தரப்பு வாதங்களை 90 பக்கங்களில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என்றும், அந்த வாதத்தின் அடிப்படையில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைய வேண்டும் என்றும், நீதிபதிகன் தீர்ப்பளித்துள்ளனர்.