வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Modified: வியாழன், 31 ஜூலை 2014 (18:13 IST)

தமிழகத்தில் தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது - ஜெயலலிதா

உயர் மின் அழுத்தத் தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தையும் 1.6.2014 முதல் எனது தலைமையிலான அரசு நீக்கியுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் அனைத்து நுகர்வோருக்கும் தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
 
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110இன் கீழ், 2014 ஜூலை 31 அன்று, முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததாவது:
 
“எங்கும் மின்சாரம், எதிலும் மின்சாரம்” என்ற அளவுக்கு, வேளாண்மை, தொழில்கள், தொழிற்சாலைகள், ரயில் போக்குவரத்து, மருத்துவமனைகள், அலுவலகங்கள், இல்லங்கள் என அனைத்தும் மின்சாரமயமாகி இருக்கின்ற சூழ்நிலையில், தமிழ்நாட்டின் மின் நிறுவு திறனைக் கணிசமாக அதிகரித்துள்ளதோடு மட்டுமல்லாமல், எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு, மின் திட்டங்களை தீட்டி, அதற்குச் செயல் வடிவம் கொடுக்கும் பணியில் எனது தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 
 
2011ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாவது முறையாக நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற போது, தமிழகத்தின் மின் தேவை 12,000 மெகாவாட்டாக இருந்தது. ஆனால், மின் உற்பத்தி மற்றும் கொள்முதல் மூலம் 8,000 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைத்து வந்தது. அதாவது, 4,000 மெகாவாட் மின் பற்றாக்குறை நிலவியது. இந்தப் பற்றாக்குறையினைப் போக்கும் வகையில், ஆமை வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த அனல் மின் திட்டங்கள் முடுக்கி விடப்பட்டன. இதன் காரணமாக கடந்த மூன்றாண்டுகளில் வல்லூர், மேட்டூர் மற்றும் வட சென்னையில் 5 அனல் மின் உற்பத்தி அலகுகள் கட்டி முடிக்கப்பட்டு 2,500 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தி திறன் நிறுவப்பட்டு, அவை வணிக ரீதியாக மின் உற்பத்தி செய்து வருகின்றன. 
 
மேலும், நடுத்தர கால கொள்முதல் அடிப்படையில் 500 மெகாவாட் மின்சாரம் ஜுன் 2013 முதல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இது தவிர, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், நீண்ட கால அடிப்படையில், 2014-2015ஆம் ஆண்டிலிருந்து 15 ஆண்டுகளுக்கு, 3,330 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுடன் கொள்முதல் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இந்த 3,330 மெகாவாட் மின்சாரத்தில், 224 மெகாவாட் மின்சாரம் தற்போது கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. வரும் ஆகஸ்ட் 2014 முதல் 1,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். மீதமுள்ள மின்சாரம் வரும் 2015-2016 ஆம் ஆண்டிலிருந்து பெறப்படும். நான் எடுத்த பகீரத முயற்சிகளின் விளைவாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் 24.6.2014 அன்று 13,775 மெகாவாட் உயர் அளவு தேவையை நிறைவேற்றியுள்ளது. மேலும், 20.6.2014 அன்று 294 மில்லியன் யூனிட் மின்சாரம் வழங்கிச் சாதனை படைத்துள்ளது. 
 
இது மட்டுமல்லாமல், தமிழகத்தில் மேலும் பல புதிய மின் திட்டங்கள் நடப்பு நிதியாண்டில் உற்பத்தியைத் தொடங்க இருக்கின்றன. தமிழ்நாடு மின் வாரியம் மற்றும் தேசிய அனல் மின் கழகத்தின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட 500 மெகாவாட் திறன் கொண்ட வல்லூர் அனல் மின் திட்டத்தின் மூன்றாவது அலகு வரும் ஆகஸ்ட் மாதம் வணிக ரீதியாக மின் உற்பத்தியைத் தொடங்கும். 500 மெகாவாட் திறன் கொண்ட தமிழ்நாடு மின் வாரியம் மற்றும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் கூட்டு முயற்சித் திட்டத்தின் முதல் அலகு வரும் அக்டோபர் மாதத்திலும், 500 மெகாவாட் திறன் கொண்ட இரண்டாம் அலகு 2015 மார்ச் மாதத்திலும் வணிக ரீதியாக மின் உற்பத்தியைத் துவங்க இருக்கின்றன. இத்திட்டத்திலிருந்து தமிழகத்திற்கு கிடைக்கும் பங்கு 387 மெகாவாட் ஆகும். 
 
கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் அலகு 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறனை 7.6.2014 அன்று எட்டியுள்ளது. இந்த அலகிலிருந்து தமிழகத்திற்குக் கிடைக்கும் பங்கு, 462 மெகாவாட் ஆகும். கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து தமிழகத்திற்குக் கூடுதல் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று நான் பாரதப் பிரதமரைக் கேட்டுக் கொண்டதன் பலனாக, மத்திய அரசின் ஒதுக்கப்படாத அளவிலிருந்து தமிழகத்திற்கு 100 மெகாவாட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆக, இந்தத் திட்டத்தில் தமிழகத்திற்கு 562 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருகிறது. 1,000 மெகாவாட் திறன் கொண்ட கூடங்குளம் அணு மின் நிலையத்தின் இரண்டாம் அலகு இந்த ஆண்டு இறுதியில் மின் உற்பத்தியைத் தொடங்கும். இதில், தமிழகத்தின் பங்கு 463 மெகாவாட் ஆகும். 
 
மேலும், 2014-2015ஆம் ஆண்டில் தலா 250 மெகாவாட் திறன் கொண்ட நெய்வேலி பழுப்பு நிலக்கரி விரிவாக்கத் திட்டம் நிலை-2இன் இரண்டு அலகுகள் மின் உற்பத்தியைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்திற்குக் கிடைக்கும் பங்கு, 230 மெகாவாட் ஆகும். 
 
நடப்பு நிதியாண்டில் உற்பத்தித் தொடங்கவிருக்கின்ற புதிய மின் திட்டங்கள் மற்றும் நீண்ட கால அடிப்படையில் கொள்முதல் செய்யப்படும் மின்சாரம் மற்றும் ஜுன் முதல் செப்டம்பர் வரை அதிக அளவில் கிடைக்கும் காற்றாலை மின்சாரம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் உயர் மின் அழுத்தத் தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தையும் 1.6.2014 முதல் எனது தலைமையிலான அரசு நீக்கியுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் அனைத்து நுகர்வோருக்கும் தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. 
 
இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.